அப்பா...
வயதுக்குவந்தநாள்முதலாய்
அப்பாவின் போக்கு
பிடிக்கவேயில்லை எனக்கு.
நேற்றுவரை கனிவாயிருந்தவர்
இன்று கண்டிப்பானவராய் மாறிப்போனார்.
ஆம்.
முன்புபோலில்லை அப்பா.
நான் வந்திறங்கும் பேருந்துநிறுத்தில்
எனக்குமுன்னரே
காத்திருக்கிறார் எனக்காக.
மழைவருமுன்னே
குடைவிரித்து
கால்கடுக்க நிற்கிறார்.
நேரமாகிடுச்சேம்மா அதான்..
என் பின்னாடியே
முன்னும்பின்னுமாய் தொடர்வதற்கு
காரணமொன்றை
நாவிலேயே வைத்திருக்கிறார்.
அப்பாமீதான ஆத்திரந்தாளாமல்
உடைந்தழுதபொழுதினில்
ஆறுதலுக்காய் அங்கந்தடவிப்பேசுகிறான்
அனிதாவின் அண்ணன்.
வீட்டில் யாருமிலா நேரத்தில்
நிலவை பார்க்கலாமென
மேல்மாடிக்கு அழைக்கிறார்
அண்டைவீட்டு மாமா
என் மாரின் கூர்பார்த்தபடியே.
பிடிக்காமலிருந்த அப்பா
ரொம்பவும் பிடித்துப்போகிறார்.
அவர் குடைவிரித்ததன் காரணம்
விளங்கிப்போனதெனக்கு.
- ஃபீனிக்ஸ் பாலா.
No comments:
Post a Comment