ரூ.400ல் சோலார் விளக்கு: மாணவன் சாதனை சந்தையில் ரூ.1,200க்கு விற்கப்படுகிறது
நாட்டின் முக்கிய பிரச்னையாக மின்சார பற்றாக்குறை இருக்கிறது. தமிழகத்தில் சொல்லவே தேவையில்லை. அனல் மின்நிலையங்களால், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது. அணுமின்நிலையங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். நிலக்கரி, பெட்ரோல் போன்ற இயற்கை வளங்களுக்கும் வரும் காலங்களில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் பெற மாநில அரசுகள் களமிறங்கியுள்ளன. காற்றாலை, சோலார், உணவு கழிவுகள், குப்பை மற்றும் காய்கறி கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 7,500 மெகா வாட் அளவுக்கு நிறுவப்பட்டு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இதேபோல், சோலார் மின்உற்பத்தியில் குஜராத் மாநிலம் ஏறத்தாழ 1,000 மெகா வாட் உற்பத்தி செய்து முதலிடத்தில் இருக்கிறது.
தமிழக அரசு சோலார் மின்உற்பத்தி கொள்கையை அறிவித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 3,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. கல்லூரி மாணவர்களிடையே சோலார் மின்உற்பத்தி, அதிநவீன தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சோலாரியன் அமைப்பு மற்றும் நியூயார்க்கை சேர்ந்த ஐஇஇஇ சென்னை பிரிவு, அமைப்பும் இணைந்து செயல்படுகின்றன.
தரமணியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சோலார் அறிவியல் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் குறித்து போட்டிகள் நடத்தின. 20 கல்லூரிகளை சேர்ந்த 65 குழு மாணவர்கள் பங்கேற்றனர். தனி நபராகவும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்தோருக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் விருதுகளை வழங்கினார்.
முதலிடம் பிடித்த பிஎஸ் அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக இஇஇ 2ம் ஆண்டு மாணவன் நவீத், சந்தையில் ஸீ 1,200க்கு விற்கப்படும் சோலார் விளக்கை ரூ.400க்கு பெறும் வகையில் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து நவீத் கூறுகையில், ‘‘முற்றிலும் பழைய பொருட்களை கொண்டு இந்த சோலார் விளக்கு செய்துள்ளேன். சோலார் பேனல், பேட்டரி பயன்படுத்தியுள்ளேன். பெரிய சோலார் விளக்கு பயன்படுத்தும் போது, பேனல் மற்றும் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம். 3 வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி மாற்றினால் போதும். பகலில் முழுவதும் சூரிய ஒளியில் சார்ஜ் ஆகிவிடும். இரவில் தடையில்லாமல் மின்சாரம் பெற முடியும்‘‘ என்றார்.
இதுபற்றி சோலார் மின்உற்பத்தி பொறியியல் வல்லுநர் ஆர்.சரவண பெருமாள் கூறியதாவது:
செலவை குறைக்கும் வகையில் இந்த சோலார் விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. செல்போன், டெலிபோன், கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களின் கழிவுகள் அதிகரித்து வருகின்றன. தற்போது மறுசுழற்சி என்பது அவசியமான ஒன்று. மாணவர் கண்டுபிடித்த இந்த சோலார் விளக்கில் பயனுள்ள பழைய வயர், டெலிபோன் போர்டு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், தரம் குறையப்போவதில்லை. இந்த தொழில்நுட்பத்தை அரசே ஏற்று, சோலார் விளக்குகளை தயாரித்து பயன்படுத்தலாம். இதை பயனுள்ள வகையில் குடிசைத் தொழிலாகவும் மாற்றலாம்.
கிராமங்களில் இரவில் மின்சார வசதியில்லாமல் தவிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நகர மக்களுக்கு பயன்படுத்த வேண்டுமென்றால், பெரிய அளவில் சோலார் விளக்குகள் தேவை. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் கிராம மக்களுக்கு வழங்கலாம்‘‘ என்றார்.
ரூ.400ல் சோலார் விளக்கு: மாணவன் சாதனை சந்தையில் ரூ.1,200க்கு விற்கப்படுகிறது
via - Nagoorkani Kader Mohideen Basha
No comments:
Post a Comment