என் மகள் செல்லப்பொண்ணுக்கு பையன் பிறந்துட்டான், இந்தாங்க இனிப்பு சாப்பிடுங்க, என்று இலையில் சர்க்கரை பொங்கல் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த கிராமவாசி சன்னாசி.
இதில் கொண்டாட என்ன இருக்கிறது என்பவர்கள் கட்டுரையை கடைசி வரை படியுங்கள், அதற்கு முன்னால் " செல்லப்பொண்ணு' என்பது சன்னாசி வளர்க்கும் பசு என்பதை முதலிலேயே தெரிந்துகொள்ளுங்கள்.
ரியல் எஸ்டேட்காரர்களின் அகோர பசியால் காடு, கழனிகளை இழந்தது வருவது போல, கூடவே அதைச் சார்ந்த கால்நடைகளையும் இழந்தும்,மறந்தும் வருகிறோம்.
இந்த நிலையில் தான் வளர்த்த பசுவிற்கு பெத்த பிள்ளைக்கு செய்வது போல இரண்டு மாதத்திற்கு முன் வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தார் இந்த மாடாபிமானி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி. பால் வியாபாரம் செய்யும் இவரிடம் மூன்று பசுக்கள் உள்ளன. மூன்றிக்கும் முறையே ராசாத்தி, ராணி, செல்லப்பொண்ணு என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார்.
இந்த மூன்று பசுக்கள்தான் சன்னாசிக்கு உலகம், இவைகளை சீராட்டி, பாராட்டி, அன்பு பாராட்டி மகிழ்வார். இவைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்தும் போவார், இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாத நேசம், வெல்லமுடியாத பாசம்.
தான் அருமையாக வளர்த்த நான்கு வயதான செல்லப்பொண்ணு முதல் முறையாக கன்று ஈனப்போவது தெரிந்ததும், மனிதர் தலைகால் புரியாத சந்தோஷத்திற்கு உள்ளானார். இந்த சந்தோஷத்தை உற்றம், சுற்றம், நட்பு என அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினார். இதற்காக நல்ல நாள் பார்த்து வளைகாப்பு நடத்திடவும் முடிவு செய்து அதற்கென தனி பத்திரிகை அடித்தார்.
அடித்த பத்திரிகையை தனது மனைவி தமிழரசியுடன் வீடு, வீடாக போய் வெற்றிலை பாக்குடன் வைத்து, "என் மகள் செல்லப்பொண்ணுக்கு வளைகாப்பு வச்சிருக்கேன், அவசியம் வந்து வாழ்த்திட்டு போங்க 'என்று வாயார, மனசார அழைத்தார்.
முதலில் இதை கோமாளித்தனமாக எடுத்துக்கொண்டவர்கள் கூட சன்னாசி பத்திரிகை வைத்து அழைத்த முறையை பார்த்துவிட்டு, அவசியம் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தனர். யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பொதுஇடத்தில் ஒரு பேனரும் வைத்துவிட்டார்.
சுபயோக சுபமான அந்த நல்ல நாளும் வந்தது. மேற்பனைக்காடு மலைமாரியம்மன் ஆலய வளாகத்திற்கு செல்லப்பொண்ணுவை குளிப்பாட்டி அழகு படுத்தி கூட்டிவந்து நிறுத்தி சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட விசேஷமான உணவு கொடுத்தனர். பின்னர் ஊர் பெரியவர் வெள்ளி வளைகாப்பினை எடுத்து தர, தமிழரசி சன்னாசி அதனை செல்லப்பொண்ணுவின் கைகளில் (கால்களில்) ஊர்ப்பெண்களில் மங்கல குலவை ஒலிக்கு நடுவே மாட்டிவிட்டார், செல்லப்பொண்ணுவின் கண்களிலும், சன்னாசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டனர்.
பின்னர் வந்திருந்தவர்கள் அனைவரும் செல்லப்பொண்ணுவிற்கு சந்தனம் பூசி, குங்குமம் இட்டு வாழ்த்தினர், வந்திருந்த அனைவருக்கும் வளைகாப்பு விருந்து வழங்கப்பட்டது.
இது எல்லாம் நடந்து முடிந்து, சரியாக இரண்டு மாதங்கள் கழித்து செல்லப்பொண்ணு "சுகப்பிரசவத்தில்' ஒரு ஆண் கன்றை ஈன்றுள்ளது. கன்றைப்பார்த்ததும், கன்றுக்கு முன்பாக துள்ளிக்குதித்த சன்னாசி உதிர்த்த வார்த்தைதான் கட்டுரையின் முதலில் சொல்லியிருப்பவை.
உயிரும், உணர்வும் கொண்ட மனிதர்களையே கவனிக்க நேரமில்லாமல், கம்ப்யூட்டர் வேகத்தில் ஒடிக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், தான் பெறாத மகளாக நினைத்து ஒரு வாயில்லாத பிராணி மீது இவ்வளவு அன்பு கொண்டிருக்கும் சன்னாசி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்தானே.
No comments:
Post a Comment