'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள்...
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள்...
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்...
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.
உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு...
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள்...
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'ப்ளாஸ்மா பெரிஸிஸ்' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.
பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது,
என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்...
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது னரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், னரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.
ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் மூளையில் ஏற்படுகிற மாறுதல்...
ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.
உடல் உறுப்புக்களை பிரித்து எடுக்கிற முறைகள்...
உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த நீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகள் உள்ளன. அவை 'வயாஸ்பான் திரவம்', 'யுரோ கால்லின்ஸ்" திரவம், 'கஸ்டோயியல்' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.
உடலிலுள்ள உறுப்புக்களை பதப்படுத்தி வைத்து உபயோகிக்கும் நாட்கள்...
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.
No comments:
Post a Comment