அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பதிவில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறியுள்ளேன்.
பிறந்தது யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம்.
பிறந்த தேதி 26-08-1910
இயற்பெயர் : ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ (Agnes Gonxha Bojaxhin).
செல்லப்பெயர் : கோன்ஸா
தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ (Nikola Bojaxhin).
தந்தையின் தொழில் பிரபலமான கட்டட ஒப்பந்தக்காரர் (யுகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி என்ற நகரின் மிக உயர்ந்த கட்டடங்கள் அவரது பெயரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன).
தாயின் பெயர் திரானி பெர்னாய் (Drane Bernai)
தாயின் தொழில் : வீடு, குடும்பம் மற்றும் கடவுள் இந்த மூன்றும் தான் இவரது உலகம்.
உடன் பிறந்தவர்கள் : அக்கா அகா (Aga) மற்றும் அண்ணன் லாஸர் (Lasar).
‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார். அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு ‘மடை திறந்த வெள்ளம் போல்’ காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார் ஆக்னஸ்.
ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்கு தள்ளப்பட்டது.
குடும்ப வருமானம் : தன் கணவனின் இறப்பிற்கு பிறகு பெர்னாய் தனக்கு தெரிந்த மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு அலங்கார ஆடைத் தயாரித்து விற்று மற்றும் ஸ்கோப்ஜி நகரின் முக்கியமான பாதிரியார் ஜாம்பிரான் கோவ்க், பெர்னாயின் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து குழந்தைகளின் கல்விக்காக சில உதவிகளை செய்தார். தனது 12-ம் வயதில் தனது ‘சமூகச் சேவை’ செய்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.
• ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்தல்
• உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்தல்
• பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு உதவி செய்தல்
• தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல்
• மருத்துவ மனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு மருந்து போட்டு விடுதல்
இதைப்பற்றி பள்ளிக்குச் செல்லும் முன் தன் தாயாரிடமும் பள்ளியில் நுழைந்தவுடன் ஆசிரியர்களிடமும், வீட்டுக்கு வருகின்ற வழியில் பேசுவார். இதைப்பற்றி பலரிடமும் விசாரிக்கும் போது ‘லொரெட்டோ சகோதரிகள்’ (Loreto Nuns) என்ற அமைப்பு இருப்பதை அறிந்தார். அவர்கள் மூலம் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ‘சமூக சேவை’ செய்வதை பற்றி அறிந்தார்.
சமூக சேவை செய்வதே முடிவாகக் கொண்ட அவர் 1923-ம் ஆண்டு பொதுச் சேவையில் ஆர்வம் இருக்கின்ற பெண்களுக்கான சமுதாய இயக்கமான Sodality of Children of Mary எனற அமைப்பில் சேர்ந்தார். இதனை ஆரம்பித்தவர் பாதிரியார் ஜாம்பிரன் கோவிக் (Jambiran Covic) ஆவார். இந்த அமைப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே இந்த அமைப்பின் முக்கிய ‘கருப்பொருளாக’ மாறினார். தனது சேவையின் மூலம் ‘அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடிக்க’ ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் ‘மேற்கு வங்காளம்’ சென்று திரும்பிய சகோதரிகளை சந்டிக்கலானார். அப்போது அவர்களிடம் இந்தியாவைப் பற்றிய அனைத்து விசயங்களையும் திரட்டினார். இந்தியாவின் மீதான ‘கனவுகள் விரிய அரம்பித்தன’. உடனே பாதிரியார் ஜாம்பிரனிடம் சென்று பேசினார். பாதிரியாரின் பதில், ‘உனது முடிவு இதுதான் என்றால் நல்லது, உன்னுடைய தாயாரிடம் அனுமதி வாங்க வேண்டும்’ என்றார். அன்று இரவே தாயாரிடம் பேசினார். தாயாரின் முடிவு சாதகமாகவே அமைய, தாயின் அனுமதியோடு சேவையில் ஈடுபட தொடங்கினார். அப்போது இராணுவத்தில் பணியாற்றி வந்த தனது அண்ணன் லாகஸிற்கும் கடிதம் எழுதினார். ‘கன்னியாஸ்திரியாகப் போவதற்கு உறுதியாக இருக்கிறாயா?’ என்றார் லாகஸ். தனது சமூக சேவை மீதுள்ள பற்று, தனது அண்ணனின் கேள்விக்கு இவ்வாறு பதில் கூறினாள். “நீ இரண்டு மில்லியன் வீரர்களை நிர்வகிக்கும் மன்னனுக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறாய். நான் உலகையே நிர்வகிக்கும் கடவுளுக்குச் சேவை செய்யப்போகிறேன்”.
தனது 18-ம் வயதில் 12 அக்டோபர், 1928-ம் ஆண்டு ராத்ஃபர்ன்ஹாம் (Rathfarnham) என்று அழைக்கப்படும் அயர்லாந்தில் உள்ள சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ (Loreto Abbey) என்கிற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். அதுவரை ஆங்கிலப் புலமை இல்லாத அவர் மிகக் குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் மிகச் சரளமாகப் பேச எழுத புரிந்து கொள்ளக் கற்றுக் கொண்டார். அடுத்த கட்டமாக ‘ஒரே தேவை சேவை’. பாரபட்சம் இல்லாமல் குழந்தை, நோயாளி, முதியவர், ஏழைகள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவை செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். இறுதியாக வங்காளத்தைச் சென்றடைய விரும்பினார். ஆனால் நிர்வாகம் தயக்கம் காட்டியது. காரணம் – ‘இவ்வளவு திறமையான பெண்ணான உன்னை அனுப்ப எங்களுக்கு மனம் இடம் கொடுக்க வில்லை’. அவளது விடாப் பிடிவாதத்தின் காரணமாக இந்த ‘இளம் புயலை’ வங்காள மாநிலம், கல்கத்தா நகருக்கு அனுப்புவதற்கு சம்மதித்தது.
1929-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையை வந்தடைந்தார். வந்த சில நிமிடங்களிலேயே கத்தோலிக்க சபை ஒரு கட்டளையை பிறப்பித்தது. ‘சட்ட விதிகளின் படி’ புதிதாக வந்து சேர்பவர் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று. அதன்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடை செய்வதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொள்ள நினைத்தவர். அதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்க வில்லை. ‘காசநோய்’ காரணமாக தனது 24-ம் வயதில் இயற்கை எய்தினார். அவர்களது நினைவாக தனது பெயரை “தெரசா” என்று மாற்றிக் கொண்டார்.
கல்கத்தாவில் சில நாட்கள் தங்கி இருந்த தெரசா அவர்களுக்கு அங்கு நிலவிய வறுமையான சூழல், ஏழைத் தொழிலாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பசியுடன் காத்திருக்கும் குழந்தைகள், சாக்கடை அருகிலேயே சமையல், சுகாதாரமற்ற குடியிருப்புகள், தொற்று வியாதிகள் ஆகியவைகள் அவரது மனதை மிகவும் பாதித்தது. இந்த சூழ்நிலையில் டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்லத்தின் பள்ளியில் ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வரலாறு, புவியல் பணி காலி இடங்களாக இருந்தன. தெரசாவின் ஆர்வம் காரணமாக அந்த பாடங்களுக்கு ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். தெரசாவின் உதடுகளில் புன்னகை திரும்பி இருந்தது. உற்சாகம் கொப்பளிக்க பாடம் சொல்லி கொடுக்க தொடங்கினார். பள்ளிக்கு ஏற்ற ஆசிரியையாகவும், குழந்தைகள் மீது அன்பாகவும், பாசத்தோடு இருந்தாலும் படிப்பு, பாடம் மற்றும் பழக்க வழக்கம் என்று வந்து விட்டால் கண்டிப்பான ஆசிரியையாக மாறி விடுவார். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய உடனேயே அவரின் மனதில் தோன்றிய எண்ணங்கள்,
O இந்தியா தான் என் தாய்நாடு
O இந்தியா தான் என் வாழ்க்கை
O இந்தியா தான் என் எதிர்காலம்
இதற்கு கூடுதலாக “இந்தி மொழி” முக்கியமானதாக அமைந்தது. இதனையும் மேலோட்டமாக கற்றுக் கொண்டார்.
இந்த சமயத்தில் மீண்டும் கல்கத்தாவிற்கே பணிமாற்றம் செய்யப்பட்டார். அங்கு கல்வியோடு சமூக சேவையும் செய்ய வேண்டியதாயிற்று. பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல் பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது என பல சேவைகளை மற்ற ஆசிரியர்களோடு இணைந்து செய்ய ஆரம்பித்தாள். பள்ளிக்கூடம், குடிசை மக்களுக்கு சேவை என்று மாறி மாறிப் போய்க் கொண்டிருந்த தெரசாவின் வாழ்க்கை குறுகிய காலத்தில் ‘பள்ளி முதல்வர்’ தெரசாவக மாறினார். பள்ளி முதல்வராக பணியாற்றிய காலத்திலேயே, 1940-ம் ஆண்டு கல்கத்தாவில் வசித்து வந்த பாதிரியார் செலஸ்டி வான் எக்செம் (Celeste Van Exem) என்பவரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். பதினேழு ஆண்டுகள் அந்தப் பள்ளியிலேயே பணியாற்றிய தெரசா, இதில் ஏராளமான நல்ல அனுபவங்களைப் பெற்றார்.
1942-43-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். பஞ்சம் வாட்டி வதைக்க ஆரம்பித்தது. கையில் வேலையின்றி, பணமின்றி மக்கள் திண்டாடினார்கள். பசிக்கொடுமை தாங்காமல் பலமுதியவர்கள் மயக்கத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். ஒரு புறம் போர், இன்னொரு புறம் பஞ்சம், இன்னொரு புறம் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. இந்த சமயத்தில் முஸ்லிம் லீக் என்கிற கட்சி இயக்கம் உருவானது. இந்தியாவை இரண்டாக பிரித்து பாகிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோஷம் வலுத்தது. பஞ்சத்தின் பிடியில் இருந்த அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுடைய சுகாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். சிந்திக்க ஆரம்பித்தார்!!! ஆனால் லொரோட்டாவின் விதிமுறைகள் கடுமையானவை. ஆகையால் அந்த சிக்கலான விதிமுறைகள் தெரசாவின் சேவையை முழு நேரமாகவோ அல்லது அதிக நேரம் செலவழிக்கவோ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக லொரேட்டாவில் இருந்த விலகுவதாக முடிவு செய்த தெரசா தனது ராஜினாமா கடிதத்தை பேராயர் மூலமாக ரோமுக்கு அனுப்பினார். நாள்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தன. இறுதியாக ஏப்ரல் 12, 1948 அன்று உத்தரவாதக் கடிதம் வந்துவிட்டது. “இனிமேல் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவகையில் ஏழைகளுக்குச் சேவை செய்வதில் எந்தத் தடையும் இல்லை” – உற்சாகம் பொங்க கூறிக்கொண்டார் தெரசா.
‘ஐந்து ரூபாய் பணம். நீல நிறத்தில் மூன்று சேலைகள்’. இதுவே தெரசாவின் சொத்து லொரேட்டாவில் இருந்து வெளியேறிய போது. வெள்ளை ஆடையுடன் அழுக்கான குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மக்களைப் பார்த்து பேசினார். அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தன்னால் முடிந்ததைச் செய்து தருவதாக கூறினார்.
தன்னை “செவிலியர்” பணியில் மேம்படுத்திக் கொள்ள விரும்பிய தெரசா அதற்காக பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். அங்கு அவர் பலவிதமான நோய்கள் பற்றியும், அவற்றுக்குச் சகிச்சை அளிக்கும் முறைகள் பற்றியும் முறையாக கற்றுக் கொண்டார். தனது பயிற்சி காலங்களில் மருத்துவர்கள் தெரசாவைப்பற்றி கூறியது – மருத்துவப் பயிற்சிக்குத் தேவையான மூன்று குணங்களான மிகுந்த உற்சாகம், ஆர்வம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கே பெற்றுள்ளார் தெரசா.
தெரசாவின் சிஷ்யைகள் பத்துப் பேரைக் கொண்ட முதல் சேவைக்குழு உருவானது. அவர்கள் அனைவருமே லொரேட்டாவில் முன்னாள் மாணவிகள். சமூக சேவைகளுக்கான ஆரம்பம் பள்ளிக்கூடம் கட்டுவதுதான் தனது முதல் நோக்கமாகக் கொண்டு, முதலில் குடிசை வாழ் ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவோம் என்று நினைத்தனர். 1949-ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அது பல பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும், ஏழைகளும் ஒன்றாக வசித்த பகுதி. முதல் கட்டமாக அங்குள்ள ஏழைக்குழந்தைகள் பற்றிய தகவல்களை குறித்துக்கொண்டு, குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்தார். “விரைவில் இந்த பகுதியில் பள்ளி ஒன்றைத் தொடங்க இருக்கிறேன். அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். முதலில் வெறும் 5 குழந்தைகளுடன் கரும்பலகை கூட இல்லாமல் தண்ணீர்த் தொட்டியின் நிழலில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் குறுகிய நாட்களில் மெல்ல மெல்ல எண்ணிக்கை உயர்ந்து 46 குழந்தைகளை எட்டியது.
நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றும், பண வசதி இல்லாத கால தாமதத்தால் அந்த பெண் இறக்க நேரிட்டாள். இந்த ‘கோர சம்பவத்தை’ அனுபவித்த அன்னை தெரசா “சிறய அளவில் மருத்துவமனை” ஆரம்பிப்பது என முடிவு செய்தார். அரசாங்கமே முடியாமல் விட்டு வைத்துள்ள சூழ்நிலையில் “கடுமையாக முயற்சி செய்தால்” சாத்தியமாகி விடும் என்று தனக்குத்தானே நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். இதன் முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று “உபரி மருந்துகளை கொடுத்து உதவுங்கள். எல்லாம் ஏழை மக்களுக்குத்தான்” என்று உதவிக் கேட்டார்.
அக்டோபர் 7, 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் என்ற அறக்கட்டளையை துவங்கினார். இதன் மூலம் பசியால் வாடுகின்றவர், வீடின்றி தவிக்கின்றவர், கண்பார்வை இல்லாதவர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என தன்னால் முயன்ற அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்து வந்தார். கவனிப்பார் இல்லாமல், வாரிசுகளால் புறக்கணிக்கப்படுகின்ற முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பினார் அன்னை தெரசா. அரசாங்க உதவியுடன் ‘காளிகட்’ என்னுமிடத்தில் ஹீக்ளி நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற “நிர்மல் ஹ்ருதய்” என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். இதன் பெயர்தான் பின்னாளில் “காளிகட் இல்லம்”.
செப்டம்பர் 23, 1955-ம் ஆண்டு முதன் முறையாக சிசுபவன் ஆரமப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், குப்பைத்தொட்டி மற்றும் சாக்கடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் என அனைவரும் இந்த காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
1957-ல் முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். பிறகு அதே ஆண்டில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றையும் ஆரம்பித்தார். இங்கு இலவசமாக உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கு “காந்தி பிரேம் நிவாஸ்” என்று பெயரிடப்பட்டது. மேலும் “தொழுநோயாளிகளின் தினம்” என்ற ஒன்றை அறிவித்து அந்நாளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார்.
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.
ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம். இது போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலமிட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார்.
தனது முழுநேரமும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். இதனால் அனைவரும் அன்னை தெரசாவை ‘குடிசை சகோதரி’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.
சேவைக்காக உலகம் ஒரு சுற்றுப் பார்வை :
• 1963-ல் ஏழைச் சிறுவர்களுக்கான பிரத்யோக பள்ளிக்கூடம் ஜீலியன் ஹென்றி மற்றும் பிஷப் ஆல்ஃப்ரட் ஆகியோரது உதவியுடன் கட்டப்பட்டது.
• 1965-ல் வெனிசூலாவில் இருக்கும் ஏழைகளுக்கு உதவி செய்தார். குறிப்பாக குடிசை பகுதிகளுக்குச் சென்று தங்கி சேவை செய்தார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியா சென்று போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், சிறைக்கைதிகள் மற்றும் அன்புக்கு ஏங்கும் அனாதைக் குழந்தைகள் ஆகியோர்க்கு சேவை செய்தார்.
• 1970-ல் ஐந்து கன்னியாஸ்திரிகளுடன் ஜோர்டன் சென்று அங்குள்ள அகதிகளுக்கு பணிவிடை செய்தார். அதே ஆண்டில் இலண்டன் சென்று அங்கு சாலையோரத்தில் மிகவும் மோசமான நிலமையில் வாழ்ந்தவர்களுக்கு உதவி செய்தார்.
• 1971-ல் மேற்கு பாகிஸ்தானில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். ஆதரவற்ற பெண்களுக்குத் தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்காக சிறு தொழில்களையும் கற்றுக் கொடுத்தார்.
• 1973-ல் எத்தியோப்பியாவுக்குச் சென்று அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். அதே ஆண்டு ஜோர்டன், இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மொரீஷியஸ், இஸ்ரேல், பெரு, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் தனது சேவை மையங்களை ஆரம்பித்தார்.
• 1977-ல் ஆந்திரப்பிரதேசம் கடும் புயலால் தாக்கப்பட்ட போது அங்கு தெரசாவும், அவரது சகோதரிகளும் விரைந்து சென்று உதவி செய்தனர்.
• 1978-ல் தனது சொந்த ஊரான ஸ்கோப்ஜிக்கு யூகோஸ்லேவிய அழைப்பின் பேரில் சென்றார்.
• 1981-ல் ஜப்பான் ஃபேமில் லைஃப் அசோசியேஷன் என்கிற அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று டோக்கியோவில் தனது சேவை மையத்தை ஆரம்பித்தார்.
• 1985-ல் அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
• 1988-ல் ரஷ்யா, க்யூபாவுக்குச் சென்று சேவை மையங்களை ஆரம்பித்தார். அதே ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற தெரசா ‘எனக்கு வெள்ளை, கறுப்பு, பச்சை மற்றும் மஞ்சள் எனகிற எந்த வித நிற பேதமும் கிடையாது. நாம் எல்லோரும் அன்பைப் பெறுவதற்காக, அன்பு செலுத்துவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம்’ என்று பேசினார்.
• 1991-ல் அமெரிக்கா மற்றும் ஈராக் அதிபர்களுக்கு வளைகுடாப் போரை நிறுத்த வலியுறுத்தி கடிதம் எழுதினார்.
• 1992-ல் பிரதமர் சதாம் உசேன் அழைப்பின் பேரில் ஈராக் சென்று மறு நிர்மாண நடவடிக்கையில் பங்கு கொண்டார்.
உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.
மார்ச் 13, 1997-ல் அறக்கட்டளையின் பொறுப்புக்கள் அனைத்தையும் நிர்மலாவிடம் ஒப்படைத்துவிட்டு சாதாரண தொண்டராகவே தனது பணியினை தொடர்ந்தார் அன்னை தெரசா.
செப்டம்பர் 5, 1997-ம் ஆண்டு அதிகாலையிலேயே விழித்த அவர் ‘நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது’ என்று முனகியபடியே பேசினார். தெரசாவுக்குச் சிகிச்சை அளித்துவரும் சிறப்பு மருத்துவர் வந்து பார்த்தார். சிறதளவு முன்னேற்றம் ஆனாலும் பேசுமளவுக்கு கூட தெம்பில்லை. அன்று இரவு 9.30 மணிக்கு ‘நெஞ்சு வலிக்கிறதே’ என்று மெல்லிய குரலில் மீண்டும் முனகினார் தெரசா. “கடவுளே இவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று பிராத்தித்தார்கள், பதறினார்கள்”. ஓசைகள் நின்று போய் படுத்திருந்தார். ஆத்மா சாந்தியடைந்தது. இன்றும் அவர்களது சேவைகள் மற்றும் தொண்டுள்ளம் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுக் கொண்டு இருக்கிறது.
கிடைத்த விருதுகள் :
• 1962 – பத்ம ஸ்ரீ விருது
• 1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
• 1971 – குட் சமரிட்டன் விருது
• 1971 – கென்னடி விருது
• 1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
• 1973 – டெம் பிள்டன் விருது
• 1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
• 1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை
வடக்கு கல்கத்தாவைச் சேர்ந்த மோனிகா பெர்ஸா என்ற பெண்மணி நீண்ட நாட்கள் தீரா வயிற்று வலியால் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தார். ஒரு நாள் ‘வீட்டில் யாரும் இல்லாத நேரம் வயிற்று வலி வந்து விட்டது. சுடு மணலில் விழுந்த மீன் போலத் துடித்தார்’. படுக்கைக்கு அருகே அன்னை தெரசாவின் படம் இருந்தது. ‘அன்னையே என் வீட்டில் யாரும் இல்லை. உங்களுடைய பாதுகாப்பில்தான் இருக்கிறேன். நீங்கள்தான் என்னுடைய தீரா வயிற்று வலியைய் குணமாக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு அங்கு இருந்த அன்னை தெரசாவின் உருவப் படத்தை வயிற்றின் மீது வைத்ததாகவும் அதன் பிறகு பெர்ஸாவுக்கு ‘வயிற்று வலி’ வரவே இல்லை எனவும் கூறப்படுகிறது.
கிருஸ்துவ மரபின்படி ஒருவர் இறந்த பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் ஏதாவது ஒரு அதிசயம் அவரது பெயரில் நிகழ்ந்தால் “ஆசிர்வதிக்கப்பட்டவர்” என்ற பட்டம் வழங்கப்படும். இங்கு பெர்ஸா வாழ்வில் நிகழ்ந்த அதிசயம் அன்னை தெரசா ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பட்டம் பெற காரணமாக இருந்தது.
அக்டோபர் 19, 2003-ல் வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் 3 இலட்சம் பேர் முன்னிலையில் சுமார் இரண்டரை மணி நேர விழா நடைபெற்றது. இரண்டாம் ஜான் பால் விழாவிற்கு வருகை தந்திருந்தார். அவரது முன்னிலையில் தெரசாவுக்கு ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
புனிதர் பட்டம் : அவரது பெயரால் இரண்டாவது அதிசயம் ஒன்று நிகழ வேண்டும். அது நிகழ்ந்து விட்டால் புனிதர் பட்டம் உறுதி செய்யப்படும். அதற்காக காத்திருப்போம்.
“அன்னை தெரசா” நிச்சயம் புனிதராவார். அவர் புனிதராகும் இப்பூவுலகில் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது பெரும்பேறு அல்லவா?
"ஒரு புன்னகையில் இருந்தே அமைதி பிறக்கிறது"
"தனிமையும் தன்னிரக்கமுமே மிகப் பயங்கரமான வறுமைநிலையாகும்."
"நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள்."
No comments:
Post a Comment