இலவச வேட்டி, சேலைகளை பதுக்கியது: மீண்டும் ஒரு ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் சகாயம்
இலவச வேட்டி, சேலைகளை பதுக்கியது: மீண்டும் ஒரு ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் சகாயம்
பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து அவற்றை மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலை சகாயம் ஐ.ஏ.எஸ். அம்பலப்படுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் பிரபல ஜவுளி உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது.
தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்காக இந்த ஆலையில் கடந்த ஆண்டு நிறைய வேட்டி, சேலைகள் தயாரிக்கப்பட்டது. ஆனால் அவற்றை பொதுமக்களுக்கு முறையாக விநியோகிக்காமல் ஆலையில் பதுக்கி வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலையில் உள்ள முத்திரையை அழித்துவிட்டு புதிய முத்திரை பதித்து, மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அந்த ஜவுளி ஆலை திட்டமிட்டிருந்தாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அந்த ஆலையில் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகள் முறையாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சகாயம் மேற்கொண்ட ஆய்வில் இந்த மோசடி உறுதி செய்யப்பட்டடுள்ளது.
மேலும் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டம்மி பதவி என வர்ணிக்கப்படும் கோ-ஆப்டெக்ஸ் துறையில் கூட சகாயம் ஐ.ஏ.எஸ். மிகவும் நேர்மையாக செயல்பட்டு, அரசுக்கு வரும் கெட்ட பெயரையும், பொது மக்களுக்கு ஏற்பட இருந்த பாதிப்பையும் நீக்கியுள்ளார். சபாஷ் சகாயம்.
No comments:
Post a Comment