சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’ ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’ ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’ ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’ ‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’ ‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’ ‘‘சாப்பாடு?’’ ‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’ ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’ ‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’ ‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’ ‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’ ‘‘உட்காரவே கூடாதா?’’ ‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’ - யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ ‘‘5,500 ரூபாய்.’’ ‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’ ‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’ ‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’ ‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’ ‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’ ‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’ ‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’ ‘‘ஆமாம்.’’ ‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’ ‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’ ‘‘லீவு எல்லாம் உண்டா?’’ ‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’ ‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’ ‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’ ‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’ ‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’ ‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’ ‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’ ‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’ ‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’ ‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’ ‘‘தெரியலை..’’ ‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’ ‘‘நெல் விவசாயம்..’’ ‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’ ‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’ ‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’ ‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’ ‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’ ‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’ ‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’ ‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’ - கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது. |
Wednesday, February 13, 2013
ஆறடுக்கு சவக்கிடங்கு - சரவணா ஸ்டோர்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment