Monday, October 27, 2014

இமயமலையைவிட வயதில் மூத்த மேற்கு தொடர்ச்சி மலை அழியும் அபாயம் - கட்டுரை

இமயமலையைவிட வயதில் மூத்த மேற்கு தொடர்ச்சி மலை அழியும் அபாயம் - கட்டுரை

News

மேற்குத் தொடர்ச்சி மலை | கோப்புப் படம்: கே.கே.முஸ்தஃபா

மேற்குத் தொடர்ச்சி மலை | கோப்புப் படம்: கே.கே.முஸ்தஃபா
இயற்கையைப் பேணுவதில் வனம், தாவர உயிரினங்கள் மற்றும் விலங்கினங்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செலுத்துகின்றன. ஆனால், மனிதர்கள் மட்டும் தங்களது பேராசையால்- வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கையை வரன்முறையின்றி அழிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர்வு, வற்றாத ஜீவநதிகளும் பாலைவனமாயின, சுனாமி, புவிவெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என பல்வேறு பிரச்சினைகள் தீவிரமடைந்து, எதிர்காலத்தை நினைத்து மனிதர்களை அச்சமடையச் செய்துள்ளன. இதற்கு உதாரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையைக் கூறலாம்.
யுனெஸ்கோ அறிவிப்பு
இமயமலையைவிட வயதில் மூத்தது மேற்கு தொடர்ச்சி மலை. உலகில் அனைத்து வன உயிரினங்கள், வன வளங்கள் மிகுந்த 32 இடங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் முக்கிய 50 அணைக்கட்டுகள், 126 முக்கிய ஆறுகள், 29 நீர்வீழ்ச்சிகள், கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி, மூணாறு உள்ளிட்ட சர்வதேச கோடைவாசஸ்தலங்கள், பழநி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்கள், ஆண்டு முழுவதும் மும்மாரி மழைப்பொழிவைக் கொடுக்கும் முள்புதர் காடுகள், புல்வெளிப் பிரதேசம், சோலைக்காடுகள், பசுமைமாறா காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னையின் அனைத்து அதிசயங்களையும் பெற்று மனிதர்கள், வன உயிரினங்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையை, 2012-ம் ஆண்டு உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஆனால் மனிதர்களின் ஆடம்பர, மேலைநாட்டு கலாச்சார மோகத்தால் உலக பாரம்பரியமிக்க இந்த மேற்கு தொடர்ச்சி மலை மெல்ல மெல்ல அழிந்து பாரம்பரியத்தை இழந்துவருகிறது.
இடது: டி.வெங்கடேஷ் | வலது: மேற்கு தொடர்ச்சி மலை
தென்னிந்தியாவின் பாதுகாப்பு அரண்
இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் `தி இந்து'விடம் கூறியது: குஜராத் மாநிலத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம் வழியாக தமிழகத்தில் கன்னியாகுமரி வரை 6 மாநிலங்களில் சங்கிலித்தொடர் போல் 1,600 கி.மீ. தொலைவு வரை பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. இந்த மலைத்தொடர், அரபிக்கடலில் இருந்துவரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து தென்மாநிலங்களுக்கு நல்ல மழையைத் தருகிறது. இந்த மலைத்தொடர், வெப்ப காலத்தில் அதிகம் வெப்பம் தாக்காதவாறும், குளிர்காலத்தில் அதிக குளிர் தாக்காதவாறும் தென்னிந்தியாவின் பருவகால நிலையை சமன்படுத்துகிறது.
80 மில்லியன் ஆண்டு பழமை
7,402 பூக்கும் தாவரங்கள், 1,814 பூக்காத தாவரங்கள், மூலிகைச்செடிகள், 10 வகை காட்டுத் தேனீக்கள், 6,000 பூச்சிகள், 508 பறவையினங்கள், 179 நீர், நில வாழ்வன, 288 மீன் வகைகள், பல்வகை வனவளம், கனிமவளம், மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டிக் கிடக்கிறது. 14 தேசிய பூங்காக்கள், 44 வன உயிரின சரணாலயங்கள், 11 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில்தான் அதிகளவு யானைகள் உள்ளன. இதுதவிர, புலி, சிறுத்தை, ஆடு உள்ளிட்ட 139 வகை பாலூட்டி விலங்குகள் உள்ளன. 35 சிகரங்கள் உள்ளன.
முற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்துள்ளன. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால் அந்த நிலப்பரப்புகளில் இருந்து பிரிந்து தென்னிந்திய பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம்பெயர்ந்தது. 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலையாகக் கருதப்படுகிறது.
126 முக்கிய ஆறுகள் உற்பத்தி
கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரவருணி உள்ளிட்ட பெரிய ஆறுகள், மணிமுத்தாறு, தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு, வைகை, பெரியாறு உள்ளிட்ட சிற்றாறுகள் போன்ற தென்னிந்தியாவின் 126 முக்கிய ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வங்காள விரிகுடா, அரபிக் கடலில் கலக்கின்றன. தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய நிலங்கள், குடிநீர் தேவை இந்த ஆறுகளையே நம்பியுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையில் குற்றாலம், அகஸ்தியர், சுருளி, வெள்ளிநீர் வீழ்ச்சி, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த நீர்வீழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. ஊட்டி ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, லிட்சினி யானை ஏரி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் செயற்கை ஏரிகள் உள்ளன.
அதிகரிக்கும் கட்டிடத்தால் ஆபத்து
தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் 60 சதவீதம் பகுதியானது புலிகள் காப்பகம், யானைகள் காப்பகம், சரணாலயங்கள், தேசியப் பூங்கா உள்ளிட்டவை அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. மனிதனுடைய வாழ்வுக்கு இயற்கையாகவும், செயற்கையாகவும் அரிய பொக்கிஷங்களை வழங்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைக்கு மனிதர்களாலேயே தற்போது பல்வேறு ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன.
வன வளங்கள் ஆக்கிரமிப்பு, உணவு பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாட்டால் வனவிலங்குகளுடைய சராசரி வாழ்நாள் குறைந்து வருகிறது. பணக்காரர்கள், இளைஞர்கள் பெரும் நட்சத்திர விடுதிகளில் அறை எடுத்து தங்குவதைக் காட்டிலும், அடர்ந்த காடுகளில் கட்டப்படும் பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகளில் தங்குவதை ரசிக்கின்றனர். இவர்களைக் குறிவைத்து கடந்த அரை நூற்றாண்டுகளாக வணிக ரீதியில் கொடைக்கானல், மேகமலை, மூணாறு, நீலகிரி, ஊட்டி உள்ளிட்ட கோடைவாசஸ் தலங்களில் `மாஸ்டர்' பிளான் மற்றும் வனத்துறை சட்டங்களை மீறி புல்வெளி, சோலை காடுகளை அழித்து, ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், காபி, டீ எஸ்டேட்டுகள் புற்றீசல்போல பலமடங்கு பெருகிவிட்டன. ஊருக்குள் வசிக்கும் மனிதர்கள் காடுகளை நோக்கியும், மனிதர்கள் ஆக்கிரமிப்பால் காடுகளில் வசிக்கும் யானைகள், சிறுத்தைப்புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊர்களை நோக்கி படையெடுப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுகளால் நிலச்சரிவு அபாயம்
தண்ணீர் தேவைக்காக கோடைவாசஸ்தலங்களில் உருவாக்கப்படும் ஆழ்துளை கிணறுகளால் பாறைகளிடையே இடைவெளி அதிகரித்து அடிக்கடி மண்சரிவு ஏற்படுகிறது. இந்த மலையின் இயற்கை நீர் ஆதாரம், பாறை வளம், மண் வளம் சுரண்டப்படுவதால் பருவநிலை மாறி மழை பொய்த்து தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு சதவீதத்துக்கு குறைவான உப்புத் தன்மை கொண்ட நீரே நன்னீர் எனப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும், ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் முழுமையும், நன்னீராகவே கிடைக்கின்றன. பெருகிவரும் கட்டிடத்தால் இந்த நன்னீர் மாசு அடைந்துள்ளதால் மீன், நத்தை, தவளை, தட்டான் உள்ளிட்ட 1,146 நன்னீர் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், பாரம்பரியமிக்க இந்த மலையை 24 மணி நேரமும் பாதுகாத்தால் மட்டுமே நாமும், நமது சந்ததியினரும் உயிர் வாழ முடியும்.
கஸ்தூரிரங்கன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதால் இப்போது உள்ள விவசாய நிலங்கள் பறிக்கப்படாது, மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றார்.
நன்றி,
தி இந்து ( தமிழ் நாளிதழ்  ) சிந்தனைக் களம் / செய்தியாளர்கள் 

No comments:

Post a Comment