வீடு இல்லாதவர்களுக்கு வீடு... வீடு வைத்திருந்தால் கார்.... வீடும் காரும் வைத்திருப்பவர்களுக்கு வைர நெக்லஸ்.... என்று தீபாவளி போனஸ் கொடுத்திருக்கிறது மும்பை நிறுவனம் ஒன்று. 50 கோடி ரூபாய் மதிப்பிலான போனஸை, வைரம் வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம் வாரி வழங்கி உள்ளது!
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தின் பெயர், 'ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்’. தரமான வைரங்களை உற்பத்தி செய்து பட்டை தீட்டி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் சாவ்ஜி டோலக்கியா, குடும்பச் சூழல் காரணமாக, பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பைக்கூட தாண்டாதவர். படிப்பைப் பாதியில் முடித்த அவர், 12 வயதில் வைரம் பட்டை தீட்டும் வேலையில் ஈடுபட்டார். அதில் நன்கு அனுபவம் பெற்ற பிறகு, தன் மூன்று சகோதரர்களுடன் இணைந்து 1992-ம் ஆண்டு 'ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கிறது. இந்த தீபாவளிக்கு, கடை நிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சமமான போனஸை அது வழங்கியுள்ளது. 1,198 பேர்களுக்கு இந்த லக்கி பிரைஸ் அடித்துள்ளது.
491 பேர்களுக்கு ஃபியட் கார், 500 பேர்களுக்கு 'கிஸ்னா’ வைர நகை, 207 பேர்களுக்கு 2 படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை போனஸாக வழங்கப்பட்டன. ஃபியட் காரை போனஸாகப் பெற்ற கடைநிலை ஊழியரான முகேஷ் பார்மர், ''கார் வாங்கும் அளவுக்கு சக்தி இல்லாதபோது, அதை கம்பெனி நிர்வாகமே பரிசாகக் கொடுத்தால் எப்படி இருக்கும்? என்னைவிட என் அம்மாவுக்குத்தான் ரொம்ப சந்தோஷம். எப்போதும் நிறுவனத்துக்கு உண்மையாக இருப்பேன்'' என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.
இது எப்படி சாத்தியமாயிற்று? ''ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஊழியர்களுடன் லாபத்தின் சிறு பகுதியைப் பிரித்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவோரை எங்களில் ஒருவராகவே பார்க்கிறோம். அதனால்தான், எங்கள் நிறுவனம் இன்று 9 ஆயிரம் ஊழியர்களோடு வளர்ந்து நிற்கிறது. 2008-ல் இருந்துதான் ஊழியர்களுக்குப் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. நாங்கள், எங்கள் ஊழியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும் அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும்தான், எங்கள் நிறுவனத்தின் பலம்'' என்கிறார், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கன்ஷையாம் டோலக்கியா.
9 ஆயிரம் பேர்களில் 1,198 பேர்களை எப்படி தேர்வு செய்தார்கள்? ''நாங்கள் ஒவ்வொரு ஊழியர்கள் செய்யும் வேலைகளையும் தினமும் கண்காணிக்கின்றோம். தான் செய்யும் தொழில் மீது ஒருவர் காட்டும் அக்கறை, காலத்தோடு சிறப்பாக ஒரு வேலையை செய்து முடிக்கும் திறன், இதைத்தான் நாங்கள் அளவுகோலாக வைத்திருக்கிறோம். அப்படித்தான், இந்த 1,198 பேர்களையும் தேர்வு செய்தோம். நாங்கள் கொடுத்த போனஸைப் பார்த்துவிட்டு தினமும் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள், எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பிக்கின்றனர்'' என்றனர் நிர்வாகத்தினர்.
No comments:
Post a Comment