1968-ல் தமிழ்நாட்டில் திரு அண்ணாதுரை அவர்களை முதலவராகக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்தபோது, சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மும்முரமாயின.
உலகத்தமிழ் மாநாட்டின் இன்னொரு முக்கிய அம்சமாக, சென்னையில் தமிழறிஞர்கள் மற்றும் சான்றோர்களுக்கு சிலை அமைத்து பெருமைப் படுத்துவது என்ற தீர்மானத்தின் படி திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், பாரதியார், பாரதிதாசன், அவ்வையார், ஜி.யு.போப், வீரமாமுனிவர், கண்ணகி, வ.உ.சிதம்பரனார் இவர்களின் சிலைகளை அமைப்பதோடு முதலமைச்சர் அண்ணாவின் சிலையையும் நிறுவுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த வரிசையில் திருவள்ளுவரின் முழு உருவச்சிலையை செய்து தரும் பொறுப்பை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஏற்றுக்கொண்டார். அதுவும் மற்ற சிலைகளெல்லாம் வெண்கலப்பூச்சு கொண்ட சிலைகளாக அமைந்திருக்க, திருவள்ளுவர் சிலை மட்டும் முழுக்க முழுக்க கருங்கல்லினால் செதுக்கப்பட்டு நிறுவப்பட்டது.
திருவள்ளுவர் சிலையை முழுக்க முழுக்க தன் செலவில் செய்து தந்ததோடல்லாமல், அச்சிலை அமைக்க தானே வள்ளுவராக வேடம் தரித்து அதற்கு மாடலாக நின்றார் நடிகர்திலகம். சிலைவடிக்கும் வேலை நடந்துகொண்டிருத சமயம் தமிழறிஞர் ஒருவரை நடிகர்திலகம் ஆலோசனை கேட்டபோது, வள்ளுவரின் பக்கத்தில் முழங்கால் உயர பேழையொன்றை அமைத்து அதன்மீது ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டிருப்பது போல அமைக்குமாறு அவ்வறிஞர் சொல்ல, நடிகர்திலகம் அந்த யோசனையை ஏற்று அவ்வாறே செய்யுமாறு ஸ்தபதியைக் கேட்டுக்கொள்ள அப்படியே அமைக்கப்பட்டது
No comments:
Post a Comment