அதிக துன்பம் தரும் நோய்களில் ஒன்று புற்றுநோய். இந்த நோயுடன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு இலவசமாகத் தங்குவதற்கு இடம் அளித்துப் பாதுகாக்கிறது ஸ்ரீமாதா டிரஸ்ட்!
இங்கு இருப்பவர்கள் நோயாளிகள்தான்... ஆனாலும், மகிழ்ச்சிக்குக் குறைவில்லாமல் இருக்கிறார்கள். ஸ்ரீமாதா டிரஸ்ட்டை நடத்திவரும் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினேன். ''1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து புற்று நோயாளிகளுக்குச் சேவை செய்துவருகிறது. இங்குள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவ நிலையம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறது. பொதுவாக நான்கு நிலைகளைக்கொண்ட புற்றுநோயை முதல் இரண்டு நிலைகளில் கண்டுபிடித்து விட்டால், குணப்படுத்திவிட முடியும். இந்தச் சிகிச்சையை அடையாறு புற்றுநோய் மருத்துவ நிலையம் ஏழை மக்களுக்கு இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் வழங்குகிறது. ஆனால், ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற வெளியூர்களில் இருந்துவரும் ஏழை மக்களுக்கு அறை எடுத்துத் தங்குவது சாத்தியம் ஆகாது. வசதியும் இருக்காது. அப்படிப்பட்டவர்களை மனதில் வைத்து நானும் அடையாறு புற்றுநோய் நிலையத்தின் மருத்துவர் சாந்தாவும் உருவாக்கியதுதான் ஸ்ரீ மாதா டிரஸ்ட்.
ஆரம்பத்தில் தங்குவதற்கு மட்டும் இடம் கொடுத்தோம். அடுத்து, உணவு கொடுக்க காஞ்சிப் பெரியவரின் உதவியை நாடினோம். தாராளமாக உதவி கிடைத்தது. இன்று வரை மனநிறைவாகப் போய்க்கொண்டு இருக்கிறது. அடையாறு புற்றுநோய் மருத்துவ நிலையத்துக்கு வரும் நோயாளி, அவருக்குத் துணையாக வரும் உறவினர் ஆகிய இருவரும் இங்கு சிகிச்சை முடியும் வரை தங்கிக்கொள்ளலாம். இங்கு தங்குபவர்களுக்குக் காலை காபி மற்றும் மூன்று வேளையும் தரமான உணவு கொடுக்கிறோம். தங்குவதற்கு தனித் தனிக் கட்டில், படுக்கைகளையும் கொடுத்துள்ளோம். வீடு போலவே இருக்க வேண்டும் என்பதற்காக டி.வி-யும் உண்டு.
கொல்கத்தாவைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி ரஸியா பேகம். இவருடைய 10 வயது மகனின் புற்றுநோய் சிகிச்சைக்காக இங்கு வந்து தங்கி இருக்கிறார். 'நான் புற்றுநோயில் இருந்து குணமடைந்துவிட்டாலும் இந்த இடத்தை விட்டுப் போக மனமே இல்லை. இங்கு இருப்பதுபோல் அமைதியான சூழலும்... சுவையான, ஆரோக்கியமான உணவும் எங்கும் கிடைக்காது'' என்றார்.
நோயை வென்று எப்படியும் ஊர் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இங்கே உள்ள ஒவ்வொரு நோயாளியின் கண்களிலும் தெரிகிறது. சீக்கிரமே நலம் அடைந்து ஊர் திரும்பட்டும்!
- சா.வடிவரசு
நன்றி விகடன் பத்திரிக்கை
No comments:
Post a Comment