Wednesday, August 29, 2012

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!





"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"
-சித்தர் தேரையர்-

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு சித்தர் தேரையர் பாடல் பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

No comments:

Post a Comment