Wednesday, August 29, 2012

தமிழனுக்கு விடிவுகாலம்…!!!


மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமாத்திரா), சாவகம்(ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம்(மலேசியா), நக்காவரம்(நிக்கோபார் தீவுகள்), முந்நீர்ப்பழந்தீவு(மாலத்தீவு) போன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக்கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமிழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு சிறந்திருந்த சோழப்பேரரசு தொடர்ந்து நீடிக்காததன் காரணம், போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததும் ஏனைய தமிழரசரான சேரர்-பாண்டியருடன் ஒற்றுமையின்றி இணங்கி நடக்காமையுமே என்பது அதே சரித்திரம் நமக்கு தரும் பாடம்.

வரலாறு சுட்டிக்காட்டிய அதே தவற்றை, மீண்டும் மீண்டும் இன்று வரை தொடர்ந்து நாம் செய்துகொண்டிருப்பதுதான் மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடப்பதன் காரணம்.

ஒற்றுமையின்மை…..!!!

இதைத்தவிர தமிழரைப்பிடித்த சனி வேறு எதுவுமே இல்லை. பள்ளன்,பறையன் என்ற சாதிவெறிக்கொடுமைகள்… போதாததற்கு தமிழ்நாட்டுத்தமிழன், இலங்கைத்தமிழன்….., அவ்வளவு ஏன், மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான், மலைநாட்டான்…. அப்பப்பா…எத்தனை பாகுபாடுகள், எத்தனை வேறுபாடுகள்!! இந்த வேறுபாடுகள், பாகுபாடுகள், முட்டாள்தனங்கள் என்றைக்கு நீங்கி தமிழன் ஒற்றுமையுடன் தன் எல்லா சகோதரர்களுடன் பேதமின்றி ஒன்றுபட்டு வாழத்தலைப்படுகிறானோ… அன்றைக்குத்தான் தமிழனுக்கு விமோசனம்…அன்றைக்குத்தான்...
தமிழனுக்கு விடிவுகாலம்…!!!

No comments:

Post a Comment