Monday, October 27, 2014

லெனின் இன்று தேவையா?

லெனின் இன்று தேவையா?
லெனின் 1918-ல் எழுதிய ‘ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம்’ புத்தகத்தைப் படித்தால் பதில் கிடைக்கும். ஏகாதிபத்தியத்தின் ஐந்து முக்கியக் கூறுகளை இந்நூலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
1. ஏகபோக முதலாளித்துவம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறுவது.
2. நிதி நிறுவனங்களின் கை ஓங்குவது.
3. நிதி ஏற்றுமதியின் முக்கியத்துவம் அதிகரிப்பது.
4. ஏகபோக முதலாளிகள் உலகப் பொருளாதாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது.
5. உலக நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது.
இவற்றில், கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பங்கீடு முதல் உலகப் போருக்குப் பின் நடந்தது என்பது உண்மை. ஆனால், முதலாளித்துவ நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்களால் நடந்த இரண்டாவது உலகப் போரின் விளைவாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடந்த தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளைவாலும் நேரடியாகப் பங்கிட்டுக்கொள்ளப்பட்ட நாடுகளுக்குப் பெயரளவில் விடுதலை கிடைத்தது.
ஏகாதிபத்தியம் லெனின் கூறிய மற்றைய அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் மக்களுக்கு என்ன கேடு என்று சிலர் கேட்கலாம்.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம் நேற்று கனவாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று அது முற்றிலும் சாத்தியமானது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி அதைச் சாத்தியமாக்குகிறது. இவை வளர்ந்ததற்கு முதலாளித்துவம் முக்கியமான காரணம் என்பது முற்றிலும் உண்மை. ஆனால், வளர்ச்சியின் பயனை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்ய வேண்டும் என்ற கொள்கைப்பிடிப்பு அதனிடம் இல்லை. இருந்தால் அது முதலாளித்துவமாக இருக்காது.
இதனாலேயே இன்று உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. போர்கள் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மதவாதிகளும் பழமைவாதிகளும் தூக்கி நிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் எவரும் ஏகாதிபத்தியம் இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்ல மாட்டார்கள்.

No comments:

Post a Comment