Monday, October 27, 2014

குறைந்த கட்டணம் ரூ.8, அதிகபட்ச கட்டணம் ரூ.23 பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

குறைந்த கட்டணம் ரூ.8, அதிகபட்ச கட்டணம் ரூ.23 பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் சேவை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான பறக்கும் பாதையில் ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

அடுத்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி முறையாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. இதற்கான கட்டணம் தற்போது தற்காலிக அடிப்படையில் தயாரிக்கப்பட்டு பரிசீலித்து வருகிறோம். பின்னர் முறையாக அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அரசு ஆய்வு செய்து, மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதில் சில மாற்றங்களை செய்து முறையான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

மாதிரி கட்டணம் விவரம்

மாதிரி கட்டணம் விவரம்:- முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.8-ம், 2 முதல் 4 கிலோ மீட்டர் வரை ரூ.10-ம், 4 முதல் 6 கிலோ மீட்டர் வரை ரூ.11-ம், 6 முதல் 9 கிலோ மீட்டர் வரை ரூ.14-ம், 9 முதல் 12 கிலோ மீட்டர் வரை ரூ.15-ம், 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை ரூ.17-ம், 15 முதல் 18 கிலோ மீட்டர் வரை ரூ.18-ம், 18 முதல் 21 கிலோ மீட்டர் வரை ரூ.19-ம், 21 முதல் 24 கிலோ மீட்டர் வரை ரூ.20-ம், 27 கிலோ மீட்டருக்கு ரூ.23-ம் கட்டணமாக வசூலிக்க மாதிரி கட்டண விவரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண விவரம் டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் தமிழக அரசு இதனை முறையாக பரிசீலித்து விரைவில் அறிவிக்க உள்ளது.

சுரங்கம் தோண்டும் எந்திரம்

மெட்ரோ ரெயில் சேவையில் வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், மேதின பூங்கா முதல் சென்டிரல், மே தின பூங்கா முதல் ஏஜி-டி.எம்.எஸ், சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ், நேரு பூங்கா முதல் எழும்பூர், ஷெனாய் நகர் முதல் திருமங்கலம், பச்சையப்பன் கல்லூரி முதல் ஷெனாய் நகர் இடையே தலா இரண்டு மார்க்கத்திலும் 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் மிஷின்) வீதம் 14 எந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பச்சையப்பன் கல்லூரியிலிருந்து, நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் இடையே தலா ஒன்று வீதம் 2 எந்திரங்களும், கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா வரை உள்ள பகுதிகளில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதில் கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா மற்றும் மேதின பூங்கா முதல் சென்டிரல் வரை உள்ள பணிகள் தொடங்கப்படவில்லை. மீதம் உள்ள அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி 21 கிலோ மீட்டர் தூரம் அதாவது 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

முதல் எந்திரம் சாதனை

முதல் சுரங்கம்தோண்டும் எந்திரம் ஷெனாய் நகரிலிருந்து அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர் மற்றும் திருமங்கலம் ஆகிய 4 ரெயில் நிலையங்களின் இடையே உள்ள 2 ஆயிரத்து 797 மீட்டர் தூரத்தை கடந்து வெற்றிகரமாக திருமங்கலம் ரெயில்நிலையத்தை அடுத்துள்ள வளைவு வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment