Monday, August 27, 2012

புதிய தலைமுறையின் ஓராண்டும்.. சன் டிவியின் மீடியா ஏகபோகமும்!



குமுதத்திலிருந்து
...................................

நான் மும்பையில் இருந்தவன் என்பதால் வட இந்திய ஆங்கில,இந்தி செய்தி சேனல்களின் செய்தி கொடுக்கும் முறை எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு நன்கு தெரிந்தவன்.

ஆனால் தமிழ் செய்தி சேனல்களைப் பார்க்கும் போது பயங்கரக் காமெடியாக இருக்கும். செய்தியை சொல்லும் முறையிலும் நேயர்களை ஒன்றுபடச் செய்யாத உரைநடை மொழியையே பயன்படுத்தி வந்தார்கள்.

ஸ்பாட்டில் இருந்து செய்தியளிக்கும் நிருபர், பேச்சு மொழியில் செய்தியை சொல்ல வேண்டும்.. அதுவே நேயர்களை வசியப்படுத்தும் என அப்போது வேறொரு சேனலில் நிருபராக இருந்த நண்பர் பாலபாரதியிடம் சொல்லியிருக்கிறேன். அவரும் முன்பு தான் வேலைப்பார்த்த சேனலில் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தொடர முடியவில்லை.

மேலும் உட்க்கார்ந்த இடத்தில் பிடிஐ நியூஸை நம்பி ஒப்பேத்திக் கொண்டிருந்தன தமிழ் சேனல்கள். ரொம்ப முக்கியம் என்றால் தவிர மற்ற நேரங்களில் சம்பவ இடத்திற்கு உடனே சென்று செய்தி பண்ணுவது என்ற பழக்கமே இல்லாமல் மொக்கையாகத் தமிழ் செய்தி சேனல்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அதோடு தாங்கள் கொடுப்பது மட்டும் தான் செய்தி என்று சன் டிவி இறுமாப்புடன் இருந்திருந்தது. அந்த இறுமாப்பே ஈழத்தில் ஒரு மாபெரும் இனப்படுகொலை நடந்தபோது கண்டுக்கொள்ளாமல் இருக்கச் செய்தது. தமிழர்களுக்கு ஒரே ஆறுதலாக மக்கள் டிவி மட்டும் தான் இருந்திருந்தது.

அப்போது தான் புதிய தலைமுறை என்றொரு சேனல் வரப்போவதாகக் கேள்விப்பட்டேன். வழக்கமான மெகா டிவி, வசந்த் டிவி போன்ற மொக்கைகளில் இதுவும் ஒன்றாகத் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன்..

ஆனால் அதற்கு மாறாகப் புதிய தலைமுறையின் செய்தியளிக்கும் முறை தமிழுக்குப் புதியதாக இருந்தது. வட இந்திய ஊடகங்களைப் போல் சம்பவ இடத்திற்குச் சென்று செய்தி பண்ணுவதும், நிருபர்கள் பேச்சு மொழியில் செய்தியளிப்பதையும் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பரவாயில்லை.. தமிழிலும் ஒரு குறிப்பிடும்படியான செய்தி சேனல் வந்திருக்கிறது என்று ஆறுதலாக இருந்தது.

புதிய தலைமுறை வளர்ச்சிக்கு அவர்கள் தங்கள் ஒளிபரப்பை துவங்கிய நேரமும் குறிப்பிட வேண்டிய அம்சம். அப்போது தான் கருணாவின் கொட்டம் அடங்கிப் புதிய ஆட்சி வந்திருந்தது. அதனால் சன் கும்பல் கொஞ்சம் பம்மியிருந்தது. அதனால் புதிய தலைமுறைக்கு ஒரு நல்ல வெற்றிடம் கிடைத்திருந்தது. அதை அவர்கள் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இரண்டே நாள் ஒளிபரப்பை மட்டும் பார்த்துவிட்டு நண்பர் ஜென்ராமிடம் `சேனல் ஹிட் தான்’ என்று சொன்னேன். அது அப்படியே பலித்தது.. மூன்று மாதத்திலேயே தமிழக மக்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.

அதன் பிறகே சன் டிவி கொஞ்சம் ஜெர்க் ஆகி தனது செய்தி சேனலில் மாற்றம் கொண்டுவந்தது.. அப்படி என்ன மாற்றம் என்று கேட்கிறீர்களா.. புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் இளமையாக நவநாகரீக ஆடையுடன் செய்தி வாசிப்பது போல் தங்கள் செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஆடையை மாற்றியது. சேலைக்கு டாட்டா காட்டிவிட்டு சுடிதாருக்கு ஹாய்ச் சொன்னது தான் அவர்கள் செய்த மாற்றம்..

ஆனால் அதற்குள் எல்லாம் கைமீறிப்போய்ப் புதிய தலைமுறை பட்டித்தொட்டி எங்கும் பரவலானது. ரெளத்திரம் பழகு, சார்பற்ற கேள்விகளுடன் வரும் வெங்கடப் பிரகாஷின் நேர்ப்படப் பேசு, ஜென்ராமின் புதுப்புது அர்த்தங்கள், அக்னிப்பரீட்சை, கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு, யெப்பீஸ்க்கு மட்டுமல்ல எனச் செய்தியோடு சேர்த்து இந்த நிகழ்ச்சிகளும் ஹிட் அடித்தன. மக்களின் போராட்ட செய்திகளைப் பரவலாகக் கொண்டு சேர்த்தார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஈழம், முல்லைப்பெரியாறு, தீண்டாமைச் சுவர் எனப் பரவலாகக் குறிப்பிடும் படியான செய்திகளை வெளிக்கொண்டுவந்திருக்கிறார்கள்.

சுக்மா கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட போது குமுதத்திற்காக செய்தி சேகரிக்க நான் அங்குச் சென்றிருந்தேன். ஆனால் நான் செல்வதற்கு முன்பே அங்குப் புதிய தலைமுறை சென்றிருந்தது. (ஆனால் சிலபல தந்திரங்கள் செய்து காட்டிலிருந்து வீடு வந்த அலெக்ஸின் முதல் பேட்டியை நாங்கள் தான் எடுத்தோம்.. :))

கொளுத்தும் வெயிலில் அதன் செய்தியாளர் மகாலிங்கம் சுறுசுறுப்பாகச் செய்தி வழங்கியதையெல்லாம் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

அதே சமயம் ஈழம், முல்லைப்பெரியாறு, அணு உலை விசயத்திலும் கொஞ்சம் கோக்கு மாக்கும் செய்திருக்கிறார்கள். ஓவர் நைட்டில் பல்டியடிக்கவும் செய்திருக்கிறார்கள். பின்னர் அதனைத் திருத்திக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.

புதிய தலைமுறையைக் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அவர்களின் ஓவர் வளர்ச்சி அதிர்ச்சியை அளித்தது. மீடியா ஜாம்பவன்களாகத் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நினைப்பில் மண் விழுந்துவிடுமோ என்ற பதட்டம் உருவாகியது சன் கும்பலுக்கு.

வழக்கமான தங்களின் அட்டாக்கை ஆரம்பித்தார்கள்.. தங்களின் எஸ்.சி.வி. மூலம் புதிய தலைமுறைக்குச் செக் வைக்கும் வேலையைச் செய்தார்கள். புதிய தலைமுறை கடந்த சில நாட்களாகக் கேபிளில் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியான நேயர்களின் கேள்விக்கணையை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் ஒளிபரப்பினார்கள். ஆனால் இப்போது அதைக் கடைசி இடங்களுக்குத் தள்ளி விட்டார்கள். ஒழுங்காக மக்களுக்கான செய்திகளைக் கொடுத்திருந்தால் இந்தப் பதட்டம் வர வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

சன் டிவியின் ஏக போகத்தை மீறி தமிழகத்தில் ஒரு சேனல் வளர்வது என்பது மிகப்பெரிய விசயம்.. புதிய தலைமுறை இந்த ஐந்து ஆண்டில் வளர்ந்தால் மட்டுமே உண்டு. அடுத்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மீண்டும் கருணா கும்பல் வந்தால் எல்லாத்தையும் காலி பண்ணி விடுவார்கள். சன் கும்பலின் ஏக போகத்திற்கு முடிவு கட்ட வந்த சேனல் என்பதற்காகப் பாராட்டலாம்.

பல தடைகளைத் தாண்டி முதலிடத்தைப் பிடித்து இன்று முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் புதிய தலைமுறைக்கும், இருபத்தி நாலு மணி நேரமும் செய்திக்காக ஓடி உழைத்து அதன் வெற்றிக்காகப் பாடுபட்ட செய்தியாளர்களுக்கும் வாழ்த்துகள்..

புதிய தலைமுறையின் மீது எனக்கு கடுமையான விமர்சனங்களும் உண்டு. இப்போது பாராட்டியதைப்போல் அதையும் எழுதியிருக்கிறேன்.. தேவைப்படும்போது இனியும் எழுதுவேன்..

கடைசியாகப் புதிய தலைமுறைக்கு.. `இரண்டு தரப்பு செய்தியையும் கொடுங்கள்.. நல்லவிசயம். ஆனால் அந்தச் செய்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கானதாக இருக்க வேண்டும்’.. வாழ்த்துகள்.. :)

நன்றி குமுதம்!

No comments:

Post a Comment