Sunday, December 21, 2014

வந்துவிட்டது சூரிய உழவு இயந்திரம்: மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

வந்துவிட்டது சூரிய உழவு இயந்திரம்: மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!



விழுப்புரம்தொழில்நுட்பத்தை விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் சூரிய சக்தி உழவு இயந்திரத்தை கண்டிபிடித்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
 
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அகுரே உத்தில் உள்ள மைலம் பொறியியல் கல்லூரி மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் நான்காம் ஆண்டு பயிலும் செல்வன் ப்ரேம்நாத், வெற்றிவேல், அருண், சிவராமன் ஆகிய நான்கு மாணவர்கள் ஒன்று சேர்ந்து துணை பேராசிரியர் ராஜபார்த்திபன் உதவியோடு சூரிய மின்சக்தியால் ஏர் உழவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த இயந்திரமானது முழுவதுமாக சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்குகிறது. இதில் எரிபொருள் ஏதும் பயன்படுத்தாதலால் சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது. மேலும் இது ரிமோட்டின் மூலம் கட்டுப்படுத்தும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு விவசாயின் கஷ்டம் குறைக்கப்படுகிறது. நாடு எவ்வளவுதான் தொழில்நுட்பத்தில் முன்னேறினாலும் எந்த தொழில் நுட்பமும் விவசாயத்தை முழுமையாக சென்றடையவில்லை. இதனை யோசித்த இந்த நான்கு மாணவர்கள், தங்களால் இயன்ற அளவு தொழில்நுட்பத்தை விவசாயிக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தும் நோக்கில் இறங்கியுள்ளனர்.

இன்று வரை நாம் டிராக்டர் கொண்டுதான் உழவு செய்கிறோம். சுமார் நூறு ஆண்டுகளாக இந்த ஒரு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் டிராக்டர் எடை மிகவும் அதிகம் என்பதால் அதனை நிலத்தில் பயன்படுத்துவதால் நிலத்தின் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே இந்த மாணவர்கள் வடிவமைத்த இயந்திரமானது டிராக்டரை விட எடை குறைவானது. இதனால் நிலத்தின் தன்மை பாதுகாக்கப்படுகின்றது. இந்த இயந்திரம் முழுவதுமாக சூரிய மின்சக்தியால் இயங்குகிறது.

மேலும் இது ரிமோட்டின் மூலமாக சுலபமாக இயக்கப்படுகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இயக்கி எவ்வளவு நிலத்தை வேண்டுமானாலும் உழவு செய்யலாம். ஒரு விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய்வதற்கு டிராக்டர் வாடகை, டீசல் மற்றும் ஆள் கூலி சேர்த்து சராசரியாக 3000 ரூபாய் செலவு ஆகிறது. தற்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் நிலையானது அல்ல. சில வருடங்களுக்கு பிறகு எரிபொருள் தட்டுப்பாடு பெருமளவு காணப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் விவசாயத்திற்கு முழுவதுமாக சூரிய சக்தியை பயன்படுத்தலாம் என்பது இந்த மாணவர்களின் கருத்து. இதனால் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதுகாக்கப்படும் என்பது அவர்களின் கருத்து. இந்த சூரியசக்தியால் இயங்கும் இந்த இயந்திரத்தை வடிவமைக்க கிட்டதட்ட 4 முதல் 5 லட்சம் வரை செலவாகும். இந்த இயந்திரத்தில் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அது சூரிய சக்தியை சேகரித்து நிலத்தை உழவுவதற்கு பயன்படுகிறது. தொடர்ந்து 4 மணிநேரம் வரை உழலாம். ஒரு சாதாரண விவசாயி டிராக்டர் மூலம் உழுவதால் ஆகும் செலவை விட இது குறைவான செலவாகும். இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதால் டீசல் செலவு இதர எரிபொருள் செலவுகள் குறைக்கப்படுகிறது.

இதற்காக இந்த மாணவர்கள் பல்வேறு விவசாயிகளை நேரில் சந்தித்து பேசி அவர்களுடைய கஷ்டங்களை கேட்ட பின்னர், விவசாயத்தை முழுவதுமாக மேம்படுத்துவதற்கான ஒரு ஆரம்பமாக இவர்கள் இந்த உழவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். மேலும் விழுப்புரத்தில் உள்ள தோட்டக்கலை இயக்குநரிடம் கலந்தாய்வு செய்த பின் இன்றுவரை இதுபோன்ற கருவி கண்டுபிடிக்கவில்லை என்றும், மேலும் இந்த கருவி எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயன்படவேண்டும் என்றும் கூறினார்.

இந்த இயந்திரத்தின் மூலம் படித்த இளைஞர்களும் விவசாயம் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை இளம் தலைமுறையினரிடம் உருவாக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment