Thursday, April 25, 2013

கிராமமும் பொருளாதாரமும்..!!!



பொருளாதாரத்தை பத்தி எழுத நானொன்னும் பொருளாதாரம் படிச்சவனும் இல்லை, பொருளாதார புத்திசீவியும் இல்லை. இருந்தாலும் நான் கண்டுணர்ந்த, வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்புன்னு சொன்னாய்ங்க., அது என்னவோ உண்மைதான் முதுகுபக்குட்டு இருக்கதாலதான் யாருமே பெரிசா அதை கண்டுக்கவில்லை போல!! பல தியாகங்களை பண்ணிட்டு இன்னைக்கு உருக்குலைந்து போயி நிக்குது கிராமங்கள். நகரமயமாக்கல், நாகரீமயமாக்கல், உலகமயமாக்கல் னு பல சுனாமிகள் தாக்கி இன்னைக்கு எலும்பும் தோலுமா விவசாயிகள் மட்டுமில்லை, கிராமங்களே அப்படிதான் இருக்கு பணம் பணம் பணம் எங்க பார்த்தாலும் அதுதான் பேச்சு., எங்களோட இயல்பே பெரும்பகுதி போச்சு, இன்னைக்கு பணம் இருந்தால்தான் எதுவுமே பண்ண முடியும்னு ஆகிடுச்சு.

சரியா 15 வருஷம் முன்னாடியெல்லாம் இப்படி இல்லை எங்கள் கிராமங்கள்., இன்னைக்கு எந்த வேலையென்றாலும் பக்கத்தில இருக்க மேலூர்க்கு வரணும் என்பதுதான் எங்களுக்கு நிலை. 15வருஷம் முன்னாடி நிலைமை அப்படி இல்லை என் கிராமம் ஒரு தன்னிறைவு பெற்ற கிராமம் தான். மேலூர்க்கு போறதே ஏதாவது அவசரவேலை இல்லை உயர்நிலைபள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இவர்கள் தான் செல்வர்.., மற்றவர்களுக்கு தேவையான அனைத்தும் என் கிராமத்துக்குள்ளயே இருந்தது விவசாய மட்டுமில்லை, அனைத்து வாழ்வியில் வேலைகளுக்கு உள்ளூரிலயே ஆட்கள் இருந்தனர். அனைவருக்குமே வேலை இருந்தது. மக்கள் தங்களை தாங்களே சார்ந்து இருந்தனர். 90% கிராமதேவைகள் அனைத்தும் உள்ளூரிலயே உற்பத்தி செய்யப்பட்டன. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் (ஒரு செயின் மாதிரி) சார்பு நிலைல இருந்தாங்க., எங்கள் கிராமங்களில் அப்போ பெரும் நிலக்கிழார்கள் னு யாரும் இல்லை ஓரளவு அனைத்து மக்களும் தங்கள் சுயதேவைக்கு நீர்ப்பாசன விளைநிலங்களும் அங்க அங்க மானாவாரி (வானம்பார்த்த பூமி) நிலங்களும் வைத்திருந்தனர். விவசாயத்தை நம்பிதான் என் கிராமம் விவசாய சார்பு தொழில்கள் அனைத்தும் இருந்தன.

விவசாய சார்பு தொழில்கள்.,

1,ஆடுமேய்த்தல் :- ஆடுமேய்த்தல் என்பது தனித்தனியே அவரவர் செய்தாலும் ஒரு சில குடும்பங்கள் இருந்தன முறைப்படி செய்ய ஆட்டுக்குட்டி வாங்கி அவர்களிடம் குடுத்தோம் என்றால் அவர்கள் வேலை அதை மேய்ச்சலுக்கு விட்டு வளர்ப்பது அந்த ஆடுகள் குட்டி போட்டால் பாதி பாதி 4குட்டி என்றால் ஆளுக்கு 2,அதையும் வளர்ப்பது அவர்கள் வேலையே.,இப்படி முதலீடு இல்லாமல் பெரும் ஆட்டுமந்தை அவர்கள் வசம் இருந்தது.,

2,மாடுவளர்த்தல் :- இந்த முறையில நாம மாடு வாங்கி விடுவது இல்லை ஆனால் அவர்களிடம் நிறைய மாடுகள் இருந்தன மாடு இல்லாத சம்சாரிகள்(விவசாயிகள்) தங்கள் விளைபொருள் கழிவுகளை (வைக்கோல்,உமி,புண்ணாக்கு) போன்றவற்றை அவர்களிடம் முழுவதும் கொடுத்துவிடுவார், அவர்கள் உழவுக்கு தேவையான நேரங்களில் மாடுகளையும்,பால் பொருட்களையும் குடுப்பர்,

3.தச்சர்:- (ஆசாரி) உழவுத்தேவையான பொருட்கள் செய்து கொடுப்பதில் இவர்களின் தேவை இன்றியமையாதது (கலப்பை, பரம்பு, மாட்டுவண்டி) சுருங்க சொன்னால் 365நாட்களும் வேலை இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு அறுவடை முடிந்து ஏக்கருக்கு இத்தனை மூடை என்று கொடுத்துவிடுவர் இவர்களுக்கு.,

4.சலவைதொழிலாளி :- இவர்களும் கிராமங்களில் இருந்து பிரித்து பார்க்க முடியா அங்கத்தினர்கள்,மொத்தமாக அறுவடை முடிந்த பின்பு இவர்களுக்கு கூலிகளை நெல்லு மூடைகளில் கொடுத்து விடுவர்,

5.மருத்துவர்(சிகைதிருத்துபவர்):- இவர்களும் கிராமங்களில் இருந்து பிரித்து பார்க்க முடியா அங்கத்தினர்கள்,மொத்தமாக அறுவடை முடிந்த பின்பு இவர்களுக்கு கூலிகளை நெல்லு மூடைகளில் கொடுத்து விடுவர்

6.விவசாயகூலிகள் :- இவர்கள் தான் கிராமங்களின் முதுகெலும்புகள். விளைநிலங்கள் இல்லாதவர்கள் மட்டுமில்லை; சிறு, குறு விவசாயிகளும் இதில் அடக்கம். சிலர் பண்டமாற்று முறைகள் போல மாற்றி மாற்றி அடுத்தவர் வேலைகளை பகிர்ந்து கொள்வர்,
மேற்கூறிய வேலைகள் இல்லாமல் இன்னும் பல வேலைகள் ஒருங்கிணைந்ததுதான் கிராமங்கள், வேலைவாய்ப்பு என்பது பெரும்பாலும் உடலுழைப்பை கொண்டே இருந்தன. ஆனால் மக்களின் வாழ்க்கை முறைக்கு தேவையான அனைத்தும் தங்கள் கிராமங்களில் இருந்தே நிறைவு செய்யப்பட்டன.

இன்றைக்கு உணவுபொருட்களில் 100%மும் வணிகநிறுவனங்களை நம்பியே உள்ளன. ஆனால் 80-90களில் நான் பார்த்த வரை கிராமங்களில் ஒரு முறைபடுத்தா பண்டமாற்றுமுறை இருந்தது. காய்கறிகள், தானியங்கள், எண்ணைவித்துக்கள் அனைத்தும் எங்கள் கிராமங்களிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. தேவைக்கு அதிகமானதை விற்பனையும் தத்தம் சொந்தபந்தங்களிடம் இலவசமாக கொடுக்கப்பட்டன. உணவுபோருட்கள் மட்டுமில்லாமல் உடலுழைப்பையும் கூட மக்கள் இலவசமாக பரிமாறிக்கொண்ட காலம் அது. ஒரு வகையான சார்புநிலை, அங்கே சுயநலம் என்பது அவ்வளவாக இல்லாத காலம் அவை. நாளடைவில் விவசாயம் இலாபம் இல்லா தொழிலாக பார்க்கப்பட்டது உலகமயமாக்கள், விவசாயகூலிகள் நகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். கிராமத்தில் கிடைத்த வருமானத்தை விட பலமடங்கு கூடுதலாக கூலி அவர்களுக்கு கிடைக்க ஆரம்பித்தன. கிடைத்த பணத்தை வைத்து அவர்களால் அனைத்தையும் வாங்க முடிந்ததால் பெருமளவு விவசாய கூலிகள் விவசாயத்தை விடுத்து மாற்று வேலைகளை தேடி நகரங்களுக்கு படையெடுத்தனர். நகரங்களின் கவர்ச்சி அவர்களை கட்டிபோட்டது என்றே சொல்ல வேண்டும். விவசாய கூலிகள் இல்லாமல் விவசாயம் சிறுக சிறுக குறைய ஆரம்பித்தது ஒரு கண்ணி விலகியதால் கிராமங்களின் சார்பு தொழில்களும் நசிய ஆரம்பித்தது இன்று 90% கிராமவாசிகள் நகரத்தை சார்ந்தே இருக்கின்றன. 70-80% விவசாயம் கைவிட பட்டுள்ளது.,அன்று கிராமங்களிலேயே முடித்து கொண்ட தேவையை இன்று நகரங்களில் போய் உழைப்பை கொடுத்து தேவையை நிறைவு செய்கின்றனர்,ஆனால் உற்பத்தி!!!???? இதே நிலை நீடித்தால் அனைத்தையும் இறக்குமதி கொண்டே பூர்த்தி செய்யவேண்டும் எத்தனை நாளுக்கு அடுத்தவர்களை நம்பி வாழ்வது!!??

ஆளும்அரசுகள் பசப்பு வார்த்தைகளையும், எண்களில் வருட வளர்ச்சியை சொல்லி பெருமைபடுகின்றனர் ஆனால் விவசாயம் படுவேகமாக அழிந்து கொண்டு வருகின்றது என்று குப்பனுக்கும்,சுப்பனுக்கும் கூட தெரியும். இதையெல்லாம் விட நமது பாரதபிரதமர் விவசாயிகள் மாற்று வேலைகளை செய்யவேண்டும் என்று திருவாய் மலர்ந்துள்ளார், உணவுபொருட்களுக்கே 100% அடுத்த நாடுகளை நம்பி இருக்கும் நிலை வரலாம்!!!

வல்லரசு, பொருளாதார முன்னேற்றம், நிலாவுக்கு விண்கலம் எல்லாம் சரிதான்.. புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதை ஆகாமல் இருந்தா சரி.

ஏனென்றால் காகிதத்தையும், அணுகழிவுகளையும் திங்க நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.

No comments:

Post a Comment