Sunday, December 28, 2014

வாழ்ந்ததற்கு அர்த்தம் வேண்டும்

வாழ்ந்ததற்கு அர்த்தம் வேண்டும்





எண்ணெய்ப் பசை சிறிதும் இல்லாததால் கொச்சைக் கயிறுபோல் திரிந்துபோன தலைமுடி…ஆங்காங்கே கிழிந்து கந்தலாகி அழுக்கடைந்து காணப்படும் ஆடைகள். அருகே சென்றால் குளித்து நாள் கணக்கில் ஆகிப்போனதன் அடையாளமாக வீசும் துர்நாற்றம்... இவை நாடு முழுவதும் சாலையோரங்களில் காணப்படும் மன நோயாளிகள், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்களின் அடையாளங்கள்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் இருந்த மனநோயாளிகளை நான்கு இளைஞர்கள் கடந்த வாரம் முடிதிருத்தம் செய்து, குளிப்பாட்டி, ஆடைகளை வழங்கி புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தனர். அதை வியப்புடன் பார்த்து அவர்களிடம் பேசத் தொடங்கினோம். அவர்களில் ஒருவரான பி.மணிமாறன் மடை திறந்த வெள்ளம்போல் பேசியது:
“என் சொந்த ஊர் திருவண்ணாமலை. விவசாயக் குடும்பம். 8-வதுவரை படிச்சிருக்கேன்.அதுக்கு மேல படிப்பு ஏறலை.`உனக்கு எது விருப்பமோ, அதைச் செய்!’னு அப்பா அறிவுரை கூறினார். எனது மானசீக குரு அன்னை தெரசா. அவரைப் பார்க்கறதுக்காக சென்னையில் இருந்து ரயிலில் கொல்கத்தா சென்றேன். அங்கே ரயில் நிலையத்தில் எனது சூட்கேஸ் திருடு போயிருச்சு. பாஷையும் புரியலை. அங்கிருந்த சிலர் என்னை பிச்சை எடுக்க வைச்சாங்க. இந்த மாதிரி ஒரு வாரம் கழிந்தது.
அப்போ கொல்கத்தாவிலே ஆட்டோ ஓட்டிக்கிட்டிருந்த ராஜேந்திரன் என்கிற தமிழர் என்னைக் காப்பாற்றி, அன்னை தெரசா ஆசிரமத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போனார். தெரசா ஆசிரம நிர்வாகிகள் எனக்கு நிறைய அறிவுரை கூறினாங்க. சொந்த ஊருக்குப் போய் ஏழை, எளியவர்களுக்கு தொண்டு செய்யுமாறு அறிவுறுத்தினாங்க. அது எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு.” எனச் சொல்லும் மணிமாறன் முதன் முதலில் கொல்கத்தாவில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சேவை செய்யச் சென்றார். ஆனால் பசியால் வாடித் திரிந்து பின்னர் ஒரு ஹோட்டலில் நாளுக்கு ரூ.35 சம்பளம் வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் வெகு நாள் தாக்குபிடிக்க முடியவில்லை, சொந்த ஊருக்கே திரும்பினார்.
“கொல்கத்தாவில் சகிப்புத் தன்மையைக் கத்துக்கிட்டேன். 2002-ம் ஆண்டு மே மாதம் (அப்போ எனக்கு 16 வயது) திருப்பூர் போனேன். அங்கு எனது அண்ணன் டெய்லரா வேலை பார்த்து வந்தாரு. அவருக்கு உதவியாளராக நான் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் மாதச் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்தேன்.
அப்போ அவர், `அந்தப் பணத்தை வைத்து சாலையோரம் காணப்படும் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோருக்கு சாப்பாடு கொடு’ எனச் சொல்லி பணத்தை வாங்க மறுத்துட்டார். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அப்போ அவங்க முகத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது” என்றார் மணிமாறன்.
வாழ்வதற்கு அர்த்தம் வேண்டும்! வாழ்ந்ததற்கு அடையாளம் வேண்டும்! என்கிற எண்ணம் ஏற்பட்டவுடன் `உலக மக்கள் சேவை மையம்’ என்கிற பெயரில் ஒரு தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மணிமாறன். சாலையோரம் திரியும் மன நோயாளிகள், ஆதரவற்றோர், தொழுநோயாளிகள் ஆகியோருக்கு உணவு, ஆடை வழங்குவது, மருத்துவ வசதி செய்வது, ஆதரவற்றோர் இறந்தால் அவர்களை இறுதிச் சடங்கும் செய்யும் பணியையும் செய்து வருகிறார்.
”திருப்பூரில் இருந்து பனியன் ஆடைகளை வாங்கி விற்பனை செய்கிறோம். அதில் கிடைக்கும் பணத்தை இந்தக் காரியங்களுக்கு பயன்படுத்துறோம். இதுவரை தமிழகம் முழுவதும் 450 தொழுநோயாளிகளைப் பராமரித்துள்ளோம். 51 தொழுநோயாளிகளை தத்தெடுத்துள்ளோம்” என அமைதியாக சொல்லும் மணிமாறன் திருப்பூர், திருவண்ணாலை, ஈரோடு, விழுப்புரம், வேலூர், சேலம் உள்பட பல்வேறு ஊர்களில் இதுவரை 138 ஆதரவற்ற பிணங்களை அவரே அடக்கம் செய்துள்ளார்.
இவரது அமைப்பின் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்துள்ளனர். இவருடைய அமைப்பின் சார்பில் கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ரத்தினம் கல்லூரி, நாமக்கல் விவேகானந்தர் பெண்கள் கல்லூரி, திருப்பூர் குமரன் கல்லூரி உள்பட தமிழ்நாடு முழுவதும் 48-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மன நலம் பாதிக்கப்பட்டோர், தொழு நோயாளிகள், ஆதரவற்றோருக்கு சேவை செய்வது, கண் தானம், ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
“அண்மையில் தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தோம். அவர் எங்களது சேவையைப் பாராட்டினார். எங்கள் பணியை இன்னும் பல இளைஞர்களிடம் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார்” எனச் சொல்கிறார் மணிமாறன்
“நாங்கள் பார்த்த அளவில் தற்போதைய இளைஞர்களில் 10 வீதம் பேர் குடும்பச் சூழ்நிலை, காதல் தோல்வி, வறுமை உள்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 5 சதவிகிதம் பேர் மனநோயாளிகளாக மாறியிருக்கிறார்கள். இளைஞர்களையும், சமுதாயத்தையும் திருத்தணும் என்கிற நோக்கத்துடனே சேவை செய்துவருகிறேன். பாதிக்கப்பட்டவர்களை குறித்து தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு சேவை செய்யத் தயார்” என்கிறார்.
இவரது சேவையைப் பயன்படுத்த 99656 56274 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






No comments:

Post a Comment