Tuesday, November 27, 2012

ரஜினியின் தத்து தந்தை


 
 
 
இவரை பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, இவர்தான் ரஜினியின் தத்து தந்தை -- அதிர்ச்சி அடையாமல் முழுவதும் படியிங்கள், ஆச்சிரியபடுவிர்கள்.

இவர் பெயர் கல்யாணசுந்தரம், இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 30 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர், அவர் சம்பாரித்த அனைத்து பணத்தையும் ஏழைகளுக்காக கொடுத்தவர். தன் தேவைகளுக்காக ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். உலகிலேயே சம்பாதித்த அணைத்து பணத்தையும் சமூக சேவைக்கு வழங்கிய முதல் நபர் இவர் தான்.

மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர்.

நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்

அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர்.

இவரை பாராட்டி ஐ நா சபை "one of the Outstanding People of the 20th Century " என்ற பட்டமளித்து கவரவித்துள்ளது. அமெரிக்கா இவருக்கு "Man of the Millennium " என்று பட்டமும் 30 கோடி பரிசு பணமும் வழங்கியது அந்த 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து விட்டார்.

இவருடைய பொது சேவைகள்

1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்

2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

இவரை பற்றி கேள்வி பட்ட நம் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி சிறிய அறையில் தங்கியிருக்கிறார்.

தான் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் வெளிய சொல்லாத நம் தலைவர், இதையும் வெளிய சொல்ல வில்லை, பின்னர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களே ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை பாருங்கள்.

நிருபர் : “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?”

ஐயா : ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!”

நிருபர் : “உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்”

ஐயா : “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?”

நிருபர் : “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்”

ஐயா : “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது”

நிருபர் : “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!”

ஐயா : “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே. நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!"

நிருபர் : வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்

ஐயா : "தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்."

நிருபர் : “என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?”

ஐயா : “உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!”

இவர்தான் திரு. பாலம் கல்யாண சுந்தரம்.

பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்) :

தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.

மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தால் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.

இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.

இவரை மாதிரி இருக்கிற நல்ல மனுஷங்க நாலு பேருக்கு தெரியணும். நம் தலைவரின் மனதும் அவரது நற்பண்புகளும் நமக்கு தெரிந்ததே அனால் இவரை போன்ற சூப்பர் ஸ்டார்கள் தெரியாமலே சென்று விடுகிறார்கள், அவரை நாம் இங்கு நம் தலைவர் சார்பாக, அவரின் தத்து தந்தையை கவுரவிப்போம்

No comments:

Post a Comment