Thursday, October 18, 2012

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதைகள்

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதைகள்
 
 
கடவுள் அனுப்பி வைத்தாரா?

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.

‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’

‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறாய்?’’
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?’’

மக்கள் யோசித்தார்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’
.


இசை'வாக இருவர்!

நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை!
கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.
இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.
''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று கேட்டார்.
''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி.
உடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்!
'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ? தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ? இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.
அவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா! ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.
'என்ன?' என்பது போல் பார்த்தார் அவர்!
''இவரை உங்களுக்குத் தெரியுமா?''
உடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க?'' என்றார் அழைத்து வந்தவரிடம்!
''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்?''
''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது?'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்!
அவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.
நம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
மெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி!'' என்றான் நெகிழ்ச்சியுடன்.
உடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி? ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது!'' என்றார்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா? நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்!'' என்றார் சிரித்தபடி.
நண்பர்களே! இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது. சீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள். வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்.
அப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.

நண்பர்கள்

ஓர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள்.

அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு.

பக்கத்து நகரத்துக்கு அவர்கள் ஒரு தடவை சினிமா பார்க்கப் போனார்கள்.

இரண்டாவது ஆட்டம்...படம் முடிந்து வெளியே வந்தார்கள்.

பக்கத்தில் இருந்த மதுக்கடைக்குள் நுழைந் தார்கள்.

மயக்கத்தோடு வெளியே வந்தார்கள்.ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

வழியில் ஒரு பெருங்காடு.அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

நள்ளிரவு நேரம்.
நடுக்காட்டில் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென்று மழை... நேரம் ஆக ஆக மழை வலுத்தது.

‘‘இனி... நாம இங்கேயே தங்கிக்கறதுதான் நல்லது. விடிஞ்சதும் ஊருக்குப் போகலாம். இப்ப நாம இந்த ஆல மரத்துக்குக் கீழே படுத்துக்கலாம்!’’ என்று அந்தப் பத்துப் பேரில் ஒருவன் சொன்னான்.

எல்லோரும் படுத்துக் கொண்டார்கள்.குளிர் ஒரு பக்கம்; பயம் ஒரு பக்கம்.எப்படியோ தூங்கிப் போனார்கள்.பொழுது விடிந்தது.விழித்துப் பார்த்தால் அவர்களுக்குள் ஒரு புதிய சிக்கல்.

ஆமாம்... அவர்களின் கைகளும் கால்களும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருந்தன.

பிரிக்க முடியவில்லை. காரணம் அவரவர்களின் கை எது? கால் எது என்பது அவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை.

அழ ஆரம்பித்தார்கள். இந்த அழுகைச் சத்தம் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வழிப்போக்கனின் காதில் விழுந்தது.

நெருங்கி வந்தான்.

‘‘என்ன ஆச்சு உங்களுக்கு?’’

‘‘பயத்துலே நடுங்கிக்கிட்டே படுத்தோம்... காலை யிலே பாத்தா கை & கால் எல்லாம் பின்னிக்கிட்டு கிடக்குது!’’

‘‘அதாங்க பிரச்னை... எது எங்களுடையதுனு அடையாளம் தெரியலே.. இப்ப என்ன பண்றது..?’’

‘‘கவலைப்படாதீங்க... நான் உங்க சிக்கலைத் தீர்த்து வைக்கிறேன்!’’

வழிப்போக்கன் பக்கத்திலிருந்த கருவேல மரத்தி லிருந்து ஒரு நீண்ட முள்ளை ஒடித்துக் கொண்டு வந்தான். ஒரு காலில் குத்தினான்.
‘‘ஆ...!’’ என்றான் ஒருத்தன்.

‘‘இந்தக் கால் உன்னுடையது. எடுத்துக்கோ...!’’ என்று சொல்லிவிட்டு ஒரு கையில் குத்தினான்.

‘‘ஐயோ!’’ என்று அலறினான் ஒருத்தன்.

‘‘இந்தக் கை உன்னுடையது. இழுத்துக்கோ’’ என்றான்.

வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.

இப்படியாக அந்த நண்பர்களின் கை&கால்களை அவர் அடையாளம் காட்டினார். அவர்கள் விடு பட்டார்கள்.

பந்தபாசம் இப்படித்தான். பல சமயம் மனிதர்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆன்மிக வெளிச்சம் என்கிற முள் வந்துதான் அவர்களை விடுவிக்க வேண்டி இருக்கிறது!

இது ஒரு புதுமையான பாத்திரம்

ஒரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

ஒரு நாள் கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு பொருளைப் பார்த்தான். இதுவரையில் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள் அது. ஆகவே, தனக்குத் தெரியாதது எல்லாமே தன் மனைவிக்கும் தெரியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.

‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார் கடைக்காரர்.

‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு உபயோகம்?’’

‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’

‘‘அப்படியா சொல்றீங்க...?’’‘‘ஆமாங்க!’’ ‘‘அப்படின்னா அதுலே ஒண்ணு கொடுங்க!’’
வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

அவனுக்குள் உற்சாகம் உற்பத்தியாயிற்று.
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத் திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியை அழைத்தான்.அவள் வந்தாள். கவனித்தாள்.

‘‘என்னங்க இது?’’ ‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’

‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போல கேட்டாள்.

‘‘இது சூடான பொருளைச் சூடாகவும், குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும் அப்படியே வெச்சிருக்கும்! உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்!’’

கணவன் தலை நிமிர்ந்து நின்றான்.

மனைவி கேட்டாள்:

‘‘உள்ளே என்ன இருக்கு?’’

அவன் சொன்னான்:

‘‘அதுவும் உனக்காகத்தான் வாங்கி வந்தேன்!’
‘‘அப்படியா? என்ன அது... சொல்லுங்களேன்.’’

‘‘ஒரு கப் காபியும் ஒரு கப் ஐஸ்கிரீமும்!’’

மனைவி மயங்கி விழுந்தாள்.

நண்பர்களே!

ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு; அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!

‘‘விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு?’’ என்று பெர்னாட்ஷாவிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்: ‘‘விஞ்ஞானம் இருக்கிறதே.... புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல் எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை!’’

அறிவால் ஏற்படுகிற வெளிச்சம் & விஞ்ஞானம்; ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம் & மெய்ஞ்ஞானம்!



நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா


ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகி றார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!


சார், இதன் தீர்வு என்ன?


ஒரு பள்ளிக்கூடம்.

ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.

மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12

&இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார்.

‘‘மாணவர்களே... இதன் தீர்வு...’’

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான்.

‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!’’

‘‘இல்லை!’’ என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள்.

‘‘ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’

‘‘இல்லை... இல்லை!’’
மாணவர்கள் விழிக்கிறார்கள்.

இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.

‘‘மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’

தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.

‘‘இப்போது மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:

22 58 33 55.

உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.

‘‘சார், இதன் தீர்வு என்ன?’’

ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘‘இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!’’

மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
‘‘மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை:

கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை:

ரிலாக்ஸாக இருங்கள்.

நண்பர்களே! இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான்.

இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னை களிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

விளைவு?

ஆலயங்களை நாடிச் சென்று ஆண்டவனிடம் முறையிடுகிறான்.

பக்தர்களே!

உங்களுக்கு பகவான் சொல்ல விரும்புகிற அறிவுரையும் இதுதான்:

1. கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

2. ரிலாக்ஸாக இருங்கள்.


அறிவு என்றால் என்ன?
ஒரு நண்பர் வந்தார்.

''உன்னிடம் ஒரு கேள்வி!'' என்றார்.

''கேள்!'' என்றேன்.

''அறிவு என்றால் என்ன?'' என்றார்.

''எனக்குச் சம்பந்தமில்லாத ஒரு விஷயம்!''

''அது எனக்குத் தெரியும்.... அதற்குச் சம்பந்தம் உள்ளவர்கள் அதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையாவது சொல்லலாமே...?''

''அதை வேண்டுமானால் சொல்கிறேன்... கன்ஃபூஷியஸைப் பார்த்து ஒருவர் இதே கேள்வியைக் கேட்டாராம்... அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?''

''சொல்!''

''தனக்குத் தெரிந்ததைத் தெரியும் என்றும் தெரியாததைத் தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு''

''இன்றைய மனிதர்கள் தெரியாததைப் பற்றியெல்லாம் தெரிந்தது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்களே...?''

''என்ன சொல்கிறாய்?''

''சந்திக்காத கடவுளைப் பற்றி சகல புள்ளி விவரமும் தந்து கொண்டிருக்கிறார்களே...!''

''உண்மைதான்... ஒப்புக் கொள்கிறேன்!''

''அப்படியானால் நான் ஒரு கதை சொல்கிறேன்.... கேட்கிறாயா...?''

''சொல்... கேட்கிறேன்!''

நண்பர் கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு பலூன் வானில் பறந்து கொண்டிருந்தது. அதில் ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்தான்.

அவன் வழிதவறிப் போய் ஒரு வயல்வெளியில் இறங்கிவிட்டான். அது எந்த இடம் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

அப்போது வயல் வரப்பு வழியாக ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

நல்லவேளை! வழிகாட்டுவதற்கு ஒருவர் வந்துவிட்டார் என்ற நம்பிக்கையில், ''ஐயா! இப்போது நான் இருக்கும் இடம் எது என்று எனக்குத் தெரியவில்லை.. உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...'' என்றான்.
அவர் சொன்னார்.

''கோதுமை வயல்களுக்கு நடுவில், ஒரு பெரிய சிவப்பு பலூனில் பாதுகாப்பாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.''

பலூனில் இருந்தவர் சொன்னார்.

''ஐயா! நீங்கள் ஒரு அக்கவுண்டண்ட் என்று நினைக்கிறேன்!''

''எப்படிக் கண்டுபிடித்தாய்?'' ''நீங்கள் சொன்ன பதில் சரியான புள்ளி விவரங்களுடன் இருந்தது. ஆனால், எதற்கும் உபயோகப்படாமல் இருந்ததே... அதை வைத்துத்தான் Ôஅக்கவுண்டண்ட்Õ என்று கண்டுபிடித்தேன்!''


நண்பர்களே! நம் வாழ்க்கைக்குப் பயன்படாத எந்த ஓர் ஆன்மிக உபதேசமும் நம்மை மேம்படுத்த முடியாது!

 
எதை விட்டுக் கொடுப்பது?
ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நிறைய சீடர்கள். இவர்கள் அனைவரும் பெரியவர் மீது அன்பைப் பொழிந்தனர். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர். பெரியவரது உலக வாழ்க்கை நிறைவு பெறும் நேரம் வந்தது. அவரைத் தேடி வந்த கடவுளின் தூதர், "ஐயா! உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்! என்றார். சீடர்கள் துடித்துப் போனார்கள்.


இன்னும் சிறிது காலம் அவரை இந்த உலகத்திலேயே இருக்க விடுங்களேன்! என்று கடவுளின் தூதரிடம் மன்றாடினர். இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டதே! என்றார் கடவுளின் தூதர். "வேறு வழி இல்லையா? என்று குரலில் சோகம் ததும்பக் கேட்டனர் சீடர்கள். ஒரே ஒரு வழிதான் உள்ளது! என்றார் தூதர். என்ன வழி? தயவு செய்து சொல்லுங்கள்! ஆர்வத்துடன் கேட்டனர் சீடர்கள்.

அவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய நீங்கள் முன்வர வேண்டும்! என்றார் தூதர். உடனே பெரியவருக்காக எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்! என்றனர் சீடர்கள். இதைக் கேட்ட தூதர், உயிர் வேண்டாம்,. உங்கள் வாழ்நாளில் ஆளுக்குக் கொஞ்சம் இவருக்குக் கொடுத்தால்... அதை இவரது ஆயுள் கணக்கில் வரவு வைத்து விடலாம்! என்றார்.

முதலில் ஒருவன் வந்தான். என் ஆயுளில் இரண்டு வருடத்தைத் தருகிறேன்! என்றான். இன்னொருவன், ஒரு வருடம் தருகிறேன்! என்றான். மூன்றாவதாக ஒருவன், ஒரு மாதம்! என்றான். எதையுமே செலவு செய்து பழக்கமில்லாத ஒருவன் எனது ஆயுளில் ஒரு நிமிட நேரத்தை இவருக்காகத் தருகிறேன்! என்றான்.

கடைசியாக வந்த ஒருவன் சொன்னான். இருபது வருடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! இதைக் கேட்ட கடவுளின் தூதருக்கு ஆச்சர்யம். இது ரொம்ப அதிகம் இல்லையா? என்று கேட்டார். உடனே அந்த ஆசாமி சொன்னான். ""நான் சொன்ன இருபது வருடங்கள் என் மனைவியின் வயதிலிருந்து!''

நண்பர்களே! உலகில் எதுவுமே உங்களுடையது இல்லை என்பதை உணருங்கள். அப்படி உணரும் போதுதான் நீங்கள் ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். "இது என்னுடையது' என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை. "எதுவும் என்னுடையது அல்ல!' என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!.



எது சரி

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.


கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.



மதவாதிகளே!
ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவ மனைக்குப் போனார்.

டாக்டரிடம் சொன்னார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.

அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.

மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.

‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.

அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.

படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...

ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.

அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு& இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.

இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.

இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!

மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.

சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.

ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்!

இப்போது டாக்டருக்கும் தலைவலி!

மதவாதிகளே!

தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!


கடவுளை விடவும் மேலானது கடவுள் நம்பிக்கை!

‘‘என்ன... இப்படி சோர்ந்து போய் நடந்து வந்துக்கிட்டு இருக்கே?’’

‘‘நடக்கவே முடியலை... அவ்வளவு சோர்வு. உடம்பில் ஏதோ கோளாறு... டாக்டர்கிட்டே போகணும்!’’

‘‘அதுக்கும் முன்னாடி கடற்கரைப் பக்கம் போகலாம் வா!’’

‘‘அங்கே எதுக்கு?’’

‘‘அங்கே ஒருத்தன் ‘சுறுசுறுப்பு டானிக்’ விற்கிறான். தினமும் காலையிலேயே ஒரு ‘ஸ்பூன்’ சாப்பிட்டா போதும். நாள்பூரா உற்சாகமா இருக்கும். சுறுசுறுப்பு தானா வந்துடும்.!’’

‘‘அப்படியா சொல்றே?’’

‘‘ஆமாம்... நான் கூட வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். நல்ல பலன் இருக்கு... நிறைய பேர் தினம் வந்து வாங்கிட்டுப் போறாங்க!’’

‘‘அப்படின்னா சரி... வா போகலாம்!’’

இருவரும் கடற்கரை நோக்கி நடந்தார்கள்.

அங்கே அவன் அந்த மருந்தை (டானிக்!) விற்றுக் கொண்டிருந்தான்.

அது அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது.

இவனும் போய் ஒரு பாட்டில் மருந்து வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

என்ன ஆச்சரியம்!

சோர்வாக இருந்த உடம்புக்குள் சுறுசுறுப்பு தெரிய ஆரம்பித்தது.

உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான். நண்பனைத் தேடிப் போய் நன்றி சொன்னான், ஒரு நல்ல மருந்தை அறிமுகம் செய்து வைத்ததற்காக!

கொஞ்ச காலம் கழிந்தது.

கைவசம் இருந்த மருந்து தீர்ந்து போனது.

மறுபடியும் வாங்க வேண்டும்.

கடற்கரைக்குப் போனான்.

அங்கே அவனைக் காணவில்லை. மருந்து விற்பவன் என்ன ஆனான்? வேறு ஊருக்கு போயிருப்பானோ?

பல ஊர்களிலும் தேடிப் பார்த்தார்கள். பலன் இல்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள்& இவர்கள் கடற்கரைக்குப் போனபோது அங்கே அவன் இருந்தான்.

இப்போது அவன் மருந்து விற்பனை செய்யவில்லை. பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

‘‘என்ன ஆச்சு உனக்கு... எங்கேயெல்லாம் உன்னைத் தேடுறது? அந்த ‘சுறுசுறுப்பு டானிக்’ இன்னும் கொஞ்சம் வேணுமே? அதுசரி... இவ்வளவு நாள் எங்கே இருந்தே?’’

‘‘ஜெயில்லே இருந்தேன்...!’’

‘‘ஜெயிலா? என்ன ஆச்சு?’’

‘‘போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் சிறைத் தண்டனை!’’

‘‘போலி மருந்தா... என்ன சொல்றே?’’

‘‘ஆமாம்... நான் உங்ககிட்டே விற்பனை பண்ணினது உண்மையிலேயே சுறுசுறுப்பு டானிக் இல்லை!’’

‘‘அப்படிச் சொல்லாதே! அதைச் சாப்பிட்டதும் எங்க உடம்பு சுறுசுறுப்பு ஏற்பட்டது உண்மை!’’

‘‘இருக்கலாம். அதுக்குக் காரணம் மருந்து இல்லை... நம்பிக்கை!’’

‘‘என்னப்பா சொல்றே?’’

‘‘நான் உங்ககிட்டே வித்தது வெறும் தண்ணிதான். உப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இதையெல்லாம் பொடி செய்து அதுலே கலந்திருந்தேன்... அவ்வளவுதான். இதைச் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு வந்துட்டதா நீங்க நினைச்சிட்டீங்க. உங்க நினைப்புதான் உங்களின் உந்து சக்தி!’’

இப்படி சொல்லிவிட்டு அந்த மனிதன் பலூன் விற்கப் போய்விட்டான்.

இவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கிடைத்தது.

கேள்வி: நமக்கு முக்கியம் கடவுளா? கடவுள் நம்பிக்கையா?

பதில்: கடவுளை விடவும் மேலானது கடவுள் நம்பிக்கை!


கோபத்தை விரட்ட என்ன செய்வது?


ஒருத்தர் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

‘‘என்னங்க இது?’’ என்றார் எதிரே வந்த நண்பர்.

‘‘எல்லாம் கோபத்தினால் வந்த விளைவு!’’ என்றார் அவர்.

‘‘கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்?’’

‘‘குடும்பத்துல சண்டை. ஆத்திரப்பட்டு என்னமோ சொல்லிப்புட்டேன்... அதுக்காக ஏதோ ஒரு பாத்திரத்தை எடுத்து என் முகத்துக்கு நேரா வீசிப்புட்டா என் வீட்டுக்காரி... அவ்வளவுதான்!’’

‘‘குடும்பம்னு இருந்தா இதெல்லாம் சகஜம்தானே...!’’

‘‘உங்க வீட்டுலேயும் இப்படி நடக்கறது உண்டா?’’

‘‘தாராளமா உண்டு!’’

‘‘ஆனா, உங்க தலையில கட்டு எதையும் காணோமே..?’’

‘‘நாம கொஞ்சம் அனுசரிச்சு நடந்துகிட்டா எதுவும் பிரச்னை வராது!’’

‘‘எப்படி அனுசரிச்சுப் போறது...? அதைக் கொஞ்சம் எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்?’’

‘‘சொல்லிக் கொடுக்கறேன். அதுக்கு முன்னாடி ஓர் உண்மையைப் புரிஞ்சிக்கணும்!’’

‘‘என்ன அது?’’

‘‘கோபம்கறது ஒரு தற்காலிகப் பைத்தியம் தான்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். தற்காலிகமா ஒருத்தருக்குப் பிடிக்கிற பைத்தியம்தான் கோபம். அந்த நேரத்துலே அவரு மறைச்சு வெச்சிருக்கிற பைத்தியக்காரத்தனம் வெடிச்சிக்கிட்டு வெளியிலே வருது... அவ்வளவு தான்!’’

‘‘சரி.. இப்ப என்ன செய்யலாம்கறீங்க?’’

‘‘கோபம் வர்ற நேரத்துல நாம் ஒரு காரியம் செய்யலாம்.. அதாவது அஞ்சு தடவை நம்ம மூச்சை ஆழமா உள்ளே இழுத்து மெதுவா மெள்ள வெளியே விடணும்.’’

‘‘அப்படி செஞ்சா...?’’

‘‘மனசுலே கோபத்துக்குப் பதிலா சுவாசம் பத்தின சிந்தனை ஏறும். இதுக்கப்புறம் கோபம் வந்தா கூட அது தீவிரமா இருக்காது. இதைத் தொடர்ந்து செஞ்சா அது ஒரு பழக்கமாகவே ஆயிடும். ஆத்திரத்தை விரட்ட, ஆன்மிகம் சொல்லிக் கொடுக்கிற ஒரு சுலபமான வழி இது!’’

‘‘நீங்க இந்த வழியைத்தான் கடைப்பிடிக்கிறீங்களா?’’

‘‘இல்லை.. அது வேறே வழி!’’

‘‘எப்படி அது?’’

‘‘என் மனைவிக்குத் திடீர் திடீர்னு பயங்கரமா கோபம் வந்துடும். கோபம் வந்துட்டா கையிலே கிடைக்கிற பாத்திரத்தையெல்லாம் எடுத்து என் முகத்துக்கு நேரா வீசறது உண்டு!’’

‘‘அதை எப்படி சமாளிக்கிறீங்க?’’

‘‘அது ரொம்ப சுலபம்.. ஒரு தலையணையை எடுத்து என் முகத்துக்கு நேரா பிடிச்சுக்குவேன்..!’’

சொர்க்கத்துக்கு அனுமதிச் சீட்டு!



ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.

ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.


மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.



‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்தி ருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்--& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானா லும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக் கான அனுமதிச் சீட்டு!’’


‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித் தான்.

பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட் டார்!’’

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’


‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:


காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!




பல் இல்லாத பக்தர்கள்...!

ஒரு பெரிய மனிதர். பக்தி மான். அவருக்குப் பல் வலி. வேலைக்காரனைக் கூப்பிட்டார்.
‘‘நீ உடனே போய் பல் வைத்தியர் ஒருவரை அழைத்து வா!’’ என்றார்.
பல் வைத்தியர் வந்து சேர்ந்தார். இவர் பல்லைக் காட்டினார். சோதித்துப் பார்த்து விட்டு அவர் சொன்னார்: ‘‘இந்தப் பல்லை எடுத்துடறதுதான் நல்லது!’’
‘‘சரி... எடுத்துடுங்க!’’ என்றார் இவர்.
இந்த நேரத்தில் வாசல் பக்கம் யாரோ வருவது தெரிந்தது. பார்த்தார். அவர் அடுத்த ஊரைச் சேர்ந்த இன்னொரு பெரிய மனிதர். வேறொரு கடவுளின் பக்தர் அவர். உடனே இவர், ஒரு ‘ஐடியா’ பண்ணினார்.
‘‘வைத்தியரே... நீங்க கொஞ்ச நேரம் அடுத்த அறையில் போய் இருந்துக்கோங்க. நான் கூப்பிடும் போது வரலாம். எடுக்க வேண்டிய பல் இதுதான்... பார்த்துக்கோங்க!’’
அவரும் ‘‘சரி’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த அறைக்குள் சென்று விட்டார்.
அடுத்த ஊர் பெரிய மனிதர் உள்ளே வந்தார். இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.
‘‘உங்கள் கடவுளிடம், நீங்க வெச்சிருக்கிற பக்தியை விட, எங்கள் கடவுள் மேலே நான் வெச்சிருக்கிற பக்தி அதிகம்!’’ என்றார் இவர்.
‘‘எப்படி சொல்றீங்க...?’’ என்றார் அவர்.
‘‘நீங்க, உங்க கடவுளுக்கு என்ன காணிக்கை செலுத்தறீங்க?’’
‘‘முடி காணிக்கை செலுத்துவோம்!’’
‘‘நான் எங்க கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா இப்ப செலுத்தப் போறேன்.’’
‘‘என்ன சொல்றீங்க?’’
‘‘கொஞ்சம் பொறுங்க!’’ என்று சொல்லிவிட்டு வேலைக்காரனைக் கூப்பிட்டு, ‘‘அவரை அழைத்துக் கொண்டு வா!’’ என்றார்.
பல் வைத்தியர் வந்தார்.
‘‘இதோ பாருங்க... என் கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா செலுத்த விரும்பறேன். அதனால ஒரு பல்லைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’
பல் வைத்தியர் புரிந்து கொண்டார். அந்தச் சொத்தைப் பல்லைச் சரியாகப் பிடுங்கி எடுத்து விட்டார்.
இதைப் பார்த்த அடுத்த ஊர்ப் பிரமுகருக்கு ஆவேசம் வந்து விட்டது.
‘‘நானும் பக்தியில் உங்களைவிட குறைந்தவன் இல்லை!’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஐயா வைத்தியரே... அவரு ஒரு பல்லைத்தானே தியாகம் பண்ணினார். நான் என் கடவுளுக்காக இரண்டு பற்களைத் தியாகம் பண்றேன். வாங்க... என்கிட்டே இருந்து இரண்டு பற்களைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’ என்றார்.
வைத்தியர் பார்த்தார். அவருக்கா வலிக்கப் போகிறது? நல்ல பல்லாகப் பார்த்து இரண்டைப் பிடுங்கிப் போட்டு விட்டார். இப்போது பல் இல்லாத அந்த இரண்டு பக்தர்களும் ஓருவரைப் பார்த்து ஒருவர் பெருமையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றி நான் என்ன சொல்வது? கடவுளே இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்!

No comments:

Post a Comment