கோவை தகிதா பதிப்பகம் சார்பில் 18 நூல்களின் வெளியீட்டுவிழா சமீபத்தில் நடந்தது. நாவல், சிறுகதை, கவிதைத் தொகுப்பு எனப் பன்முக நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்ற வந்தார் அறிவுமதி. '' தலைசிறந்த பாடல் ஆசிரியர்கள், பாடகர்கள் யார்? என்று கேட்டால், நம் ஊர் வயல் வெளிகளில் நாற்று நடும் பெண்களைத்தான் சுட்டிக்காட்டுவேன். அழுக்குச் சேலை உடுத்தி இருந்தாலும் அவர்களுடைய பாடலின் தமிழ் அத்தனை சுத்தமானது. அப்பத்தா பாடிய பாட்டை காதுகளின் வழியே உள்வாங்கும் குழந்தை தன்னுடைய மன வங்கியில் சேமித்துப் பத்திரமாகவைக்கிறது. தான் பெரியவளாகி, நடவுக்குச் செல்கையில் அதை எடுத்து வாய் வழியே செலவுசெய்கிறது. இப்படித்தான், வாய் மொழியாக நம் இலக்கியம், இளமை குறையாமல் வாழ்கிறது. திரைப்படங்களுக்காக நான் எழுதிய பாடல்களின் சொந்தக்காரர்கள் இந்தப் பெண்கள்தான். அவர்களின் நடவுப் பாடலில் இருந்துதான் நான் இலக்கியம் கற்றேன். நான் மட்டுமல்ல... அண்ணன் வைரமுத்துவும் அப்படித்தான். என் தம்பிமார்களான நா.முத்துக்குமார், யுகபாரதி, கபிலன் எல்லோரும் அப்படித்தான். இளையராஜா, இசையைக் கற்றுக்கொண்டது, நடவுநட்ட அவரது தாய் சின்னத்தாயிடம்தான். ஆக, உண்மையான இலக்கியம் கிராமங்களில்தான் வாழ்கிறது. அங்கே எல்லாமே பாட்டுதான். உழும்போதும் பாட்டு, நாற்று நடும்போதும் பாட்டு, களை எடுக்கையிலும் பாட்டு, கதிர் அறுக்கையிலும் பாட்டு. பாடிப் பாடியே நம் தமிழையும் இலக்கியத்தையும் சாகாமல் வாழவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
குழந்தைத் தன்மைதான் உலகின் மிகப் பெரிய வரம். குழந்தைகள்தான் இந்த யுகத்தின் கடவுள்கள். இந்த யுகத்தின் இயற்கை காவலர்கள். குழந்தைகளின் மனதில்தான் வனம் வாழ்கிறது. அந்த வனத்தில்தான் யானை, புலி, சிங்கம், மான்கள் எல்லாம் பாதுகாப்பாக வசித்துக்கொண்டு இருக்கின்றன. நான் சொல்வது உண்மையா என்று கண்டறிய, ஒரு குழந்தையிடம் வெள்ளைக் காகிதத்தையும் வண்ணப் பென்சிலையும் கொடுத்து படம் வரையச் சொல்லுங்கள். அந்தக் குழந்தை முதலில் மலை வரையும்; அப்புறம் வனம் வரையும்; பின்பு நதியை வரையும்; நதியின் கரையில், மான்களையும் யானைகளையும் வரையும்; மேலே சூரியனை வரையும்.
நாமோ, நாகரிகத்தைப் புகுத்துகிறோம் என்ற போர்வையில் மரங்களை வெட்டி வனங்களை அழிக்கிறோம். மான்களையும் மீன்களையும் வேட்டையாடுகிறோம். இனியாவது நிறுத்துங்கள் அவற்றை. குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் நிறையக் கற்றுக்கொண்டது அவர்களிடம்தான். ஒரு பள்ளிக்குச் சென்றபோது ஒரு குழந்தையிடம் 'பென்சில் சீவுகையில் உனக்கு என்ன தோன்றுகிறது?’ என்று கேட்டேன். சற்றும் யோசிக்காமல், 'மரத்தை வெட்டுறது மாதிரி இருக்கு மாமா’ என்றது குழந்தை. ஒற்றை மழலை வரி... ஓராயிரம் அர்த்தங்களைக் கற்பிக்கிறது. இனியாவது திருந்துவோம்'' என்றார்.
அர்த்தமுள்ள உரை!
- எஸ்.ஷக்தி
படங்கள்: தி.விஜய்
No comments:
Post a Comment