Friday, January 2, 2015

ஐ.டி. நிறுவனங்களின் அக்கிரமங்கள்: இப்படி பண்றீங்களேம்மா!

ஐ.டி. நிறுவனங்களின் அக்கிரமங்கள்: இப்படி பண்றீங்களேம்மா!


எல்லா கதைகளுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஐ.டி நிறுவனங்களைப் பற்றி நான் முதலில் புரிந்துகொள்ளத் தொடங்கியது கல்லூரியின் நான்காம் வருடத்தில்தான்.
கேம்பஸ் இண்டர்வியூவுக்கு பல கனவுகளுடன் ஐ.டி நிறுவனங்களின் செயல்பாடு எப்படி? எந்தெந்த டெக்னாலஜியில் நம்மை வளர்த்துக் கொண்டால் உதவிகரமாக இருக்கும் என்றெல்லாம் நாங்கள் தேடித் தேடி படித்து வந்தோம். சரி, இப்போது இதுதான் நமது பாதை என்று ஆகிவிட்டது; இனி இந்த பயணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் முன்பே சிலர் சிந்திக்கத் தொடங்கினர்.
கல்லூரி காலம் முடியும் முன்னரே நிறைய பேருக்கு நிறுவனத்தில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் (Call Letter) வந்தது.
ஜூலை மாதத்தின் கடைசியில் வரிசை வரிசையாக நண்பர்கள் சேரத் தொடங்கினர். ஆகஸ்ட் மாதத்தில் எனது பயணமும் தொடங்கியது, ஆனால் கால் லெட்டருக்குக் காத்திருந்தபடியே சில நண்பர்கள் தங்கள் நாட்களை கடத்தினர்.
முதலில் 'நீங்க என்னடா அதுக்குள்ள வேலைக்கு சேர்ந்துடீங்க கொஞ்ச வாழ்க்கையையும் வாழுங்க' என்றெல்லாம் கேலி செய்து வந்தனர். நாட்கள் நகர நகர எனது ட்ரெய்னிங் முடிந்தது, ப்ராஜெக்ட்டிற்காக நான் காத்திருந்த நாட்களில் எனது நண்பன் அவனது கால் லெட்டருக்காகக் காத்திருந்தான்.
பெஞ்ச் படலம்
டிசம்பர் மாதம் ஐ.டி. நிறுவனங்களின் இலையுதிர் காலம் வெளிநாட்டில் எங்கும் கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டம் என்பதால் ப்ராஜெக்ட் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இருந்தாலும் தினந்தோறும் அலுவலகம் வந்தபடி வாய்ப்புகள் தேடிக் காத்திருந்தேன் நண்பர்களுடன்.
இந்தக் காத்திருக்கும் படலத்தின் பெயர் 'பென்ச்' (Bench). ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் ப்ராஜெக்ட்டும் கிடைத்தது. அன்றும் நண்பன் தனது ப்ராஜெக்டிற்காக காத்திருந்தான். கல்லூரியில் பயோ டெக்னாலஜி படித்த அவன் கேம்பஸ் இன்டர்வியூ'வில் மூன்று நிறுவனங்கள் நடத்திய இன்டர்வியூவையும் அசத்தி ஒரே நாளில் மூன்று வேலைகளை வாங்கினான். மூன்றில் ஒன்று எடுக்க வேண்டிய தருணம் அன்று.
ஐ.டி. நிறுவனத்தில் வேலைப் பார்க்கச் சென்றாலும் தான் படித்த படிப்பு வீண்போகக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். மற்ற இரண்டு நிறுவனங்களை காட்டிலும் 'அச்சில்' நிறுவனத்தில் சம்பளம் சற்று குறைவுதான் என்றாலும் தான் படித்த படிப்பை இணைக்கும் வகையில் ஐ.டி.யில் லைஃப் சயின்ஸ் பிரிவில் வேலைப் பார்க்கிற வாய்ப்பு என்கிற ஒரே காரணத்திற்காக, அச்சில் நிறுவனத்தில் வேலை செய்வதாக உறுதி கொடுத்தான். அவனுடன் சேர்த்து 2012 ஆம் ஆண்டு அச்சில் நிறுவனத்தில் வேலை கிடைத்த பலருக்கும் அந்த வருடத்தில் 'கால் லெட்டர்' வரவில்லை.
காலாவதியான கால் லெட்டர்கள்
நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அப்போது வரை நிறுவனத்திலிருந்து அவனுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் இருந்தது. நாட்கள் காத்திருப்பை அதிகரித்துக் கொண்டே வந்தன. இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாதோ? என்கிற வருத்தம், நண்பர்கள் எல்லாம் வேலைக்கு போகும்போது என்னால் போக முடியவில்லையே என்ற விரக்தி, இன்று வந்திடுமோ நாளை வந்திடுமோ இப்படி ஐயத்திலே ஒவ்வொரு நாளும் காத்திருப்பில் கடந்தது.
அந்த வருடத்தில் கால் லெட்டர் கிடைத்த சிலருக்கும் கால் லெட்டர் வந்துவிட்டதால் உங்கள் அனைவருக்கும் வேலை நிச்சயம் என்று கிடையாது. 'ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் மெரிட் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். மற்றவர்களைப்பற்றி நாங்கள் பின்பு கூறுவோம்' என்று நிறுவனம் உரைத்த செய்தி அந்த வருடத்தில் சேர்ந்த பல ஊழியர்களை பாதித்தது.
இனிமேலும் காத்திருந்து என்ன நடக்கப் போகிறது? இந்த ஐ.டி'லாம் நமக்குப் பகல்கனவு தான். இனியும் காத்திருப்பதில் பயன் ஏதும் இல்லை என்கிற சிந்தையில் பேங்க் தேர்வு எழுதி வெற்றி பெற்று கிளெர்க்காக வேலைக்குச் சேர்ந்தான்.
சவுக்கடி மின்னஞ்சல்
நான்கு வருடம் பொறியியலை காதலுடன் படித்தவனுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைப் பார்க்கவில்லையே என்கிற வருத்தம். 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சேர வேண்டியவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் கழித்து நிறுவனத்திடம் அழைப்புக் கடிதம் வந்தது:
'வாழ்த்துக்கள் நீங்கள் அடுத்த மாதம் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த வேலையில் சேர விருப்பம் இல்லை என்றால், உடனடியாக இரண்டு நாட்களுக்குள் சொல்லி விடவும்' என்று அக்கடித்தில் எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்து அமைதியாக தான் எடுத்த முடிவு தான் சரி என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். இதே கடித்ததை பெற்ற என் தோழி ஒருத்தி இதைக் கண்டு வெகுண்டெழுந்தாள் 'ஒன்றரை வருடங்கள் ஆகிறது, எனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததே மறந்து போச்சு. இன்று உங்கள் கடிதத்தை கண்டதும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் உங்களுக்காக வருடங்களாக காத்திருக்கிறோம்... உங்களால் உங்களது மெத்தனத்திற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாதா? எத்தனை திறமைசாலிகளின் கனவை நீங்கள் உடைத்துள்ளீர்கள் என்று தெரியுமா? எவ்வளவு ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அது என்ன இரண்டு நாட்களுக்குள் பதிலை சொல்லு என்று கெடு விதிக்கின்றீர்கள்? எங்களது மின்னஞ்சல்களுக்கு பதில் சொன்னீர்களா? அழைப்புகளுக்கு பதில் சொன்னீர்களா? இருந்தாலும் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன் 'பங்குச் சந்தையில் உங்கள் நிறுவனத்தின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். மீண்டும் உங்களது பங்குகள் இறங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது; அப்படி கீழிறங்கும் பட்சத்தில் என்னைப் போன்றவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கு நீங்கள் கொஞ்சமும் தயங்கமாட்டீர்கள் என்று நான் நன்கு அறிவேன். மனிதர்களை மதிக்கத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் நான் இப்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனிதாபிமானமற்ற உங்கள் நிறுவனத்தின் வேலை எனக்கு நிச்சயம் வேண்டாம். இதை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கொண்டு செல்லுங்கள், எனக்குக் கவலையில்லை' என்று சவுக்கடி வரிகளில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினாள்.
தமிழகத்தில் அமைந்துள்ள சேவை சார்ந்த ஐ.டி நிறுவனங்கள் பலவும் மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்வதில்லை.
நாங்க இருக்கோம்
'ஆமாண்ணா.. இங்க வாங்க.. அவர் சொன்னத நாம எப்படி மூணு மாசத்துக்குள் முடிக்கறது? இதுல இருக்குற வேலையை பார்த்தா டெவெலப்மென்ட், டெஸ்டிங் எல்லாம் சேர்த்து குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகுமே!' என்று நண்பன் ஒருவரிடம் கேட்டான். அவர் 'இல்லைடா, அது மூன்று மாசம் இல்லை இன்னும் இரண்டு மாசத்துக்குள் முடிக்கணும். ஆமா, என்னை ஏன் நீங்க அண்ணான்னு கூப்படறீங்க? நானும் உங்க பேட்ச் தான், இந்த ப்ராஜெக்டல நாங்க மூணு மாசமா வேலை செய்யறோம். அப்பவே இத முடிக்க ஒரு வருஷம் ஆகும்ன்னு ஒருத்தர் சொன்னாரு. அது இப்போ தான் இவங்களுக்கு புரிஞ்சிருக்கு. இன்னும் இரண்டு மாசத்துல முடிச்சாகணும்னு புடுங்கறாங்க. நான் மூணு வாரமா இங்கயே இரண்டு மணி வரைக்கும் வேலை பார்க்கிறேன். சில சமயத்துல 48 மணி நேரம் தொடர்ந்து வேலைப் பார்க்கிற மாதிரி ஆகுது.. சன்டேவும் எங்களுக்கு விடுமுறை கிடையாது' என்றார்.
'இப்போ தான் இந்த வேலை முடிக்க ஆள் தேவைன்னு உங்களலாம் சேர்த்திருக்காங்க, காசாகும்.. ப்ராஜெக்ட் பட்ஜெட்ன்னு சொல்லி சீனியர்களையும் சேர்க்கல. இந்த மேனேஜர்க்கும் டெக்னிகலா எதுவும் தெரியல. எதாவது வடை சுட்டு முடித்துக் கொடுக்கிறோம்ன்னு வாக்கு கொடுத்திடராறு. அதுக்கு ஏற்ற மாதிரி ஆளுங்களையும் எடுக்கணும்.'
'சரி எதுக்கு பாஸ், இப்படிலாம் கஷ்டப்படறீங்க? உங்க பிரச்சினைய HR - Human Resource (மனிதவளம்) பார்வைக்கு கொண்டு போக வேண்டியதுதானே?' என்றேன்.
'பாஸ் அதுலாம் உங்களுக்கு தான் நான் பச்சை டாக் (Green Tag) போட்டிருக்கேன் உங்கள மாதிரி ப்ளூ டாக் (Blue Tag) போடலை. நாங்கலாம் டெம்ப்ரவரி வொர்க்கர். இங்க இரண்டு வருஷம் இப்படி வேலை பார்த்தாதான் இந்த மேனேஜர் ரெகமெண்ட் செய்து எங்களை பெர்மனேன்ட் ஆக்குவாறு!' என்று பதில் வந்தது.
ஏன் பாஸ் நீங்க இன்ஜினியரிங் படிக்கலியா? என்றேன். 'இல்லை பாஸ் நான் பீ.ஈ. கம்ப்யூட்டர் சைன்ஸ் தான். நான் ரூரல்ல (Rural) படிச்சேன் நான் படிச்ச கல்லூரியில கேம்பஸ் ப்ளேஸ்மென்ட் கிடையாது. வேலை தேடி அலைஞ்சி பாருங்க அப்போ உங்களுக்கு தெரியும் ஒரு வேலை வாங்கறர்து எப்படின்னு! நாங்கலாம் உங்களுடைய இப்போதைய லெவல் தொடுவதற்கு இரண்டு வருஷமாவது கடினமாக உழைக்கணும். அப்போ கூட இவங்க என்ன செய்வாங்கன்னு தெரியாது.
பரீட்சை எனும் வேலி
என் உறவினர் வேலை பார்க்கும் மற்றொரு பிரபலமான ஐ.டி நிறுவனத்தில் பி.எஸ்.சி படித்தவர்களை பொறியியளார்கள் பணியில் அமர்த்தி பணி நேரத்திற்கு பிறகு ட்ரெய்னிங் அளிக்கின்றனர். விடுமுறை நாட்களில் அவர்கள் புகழ்பெற்ற கல்லூரியில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் எடுத்து வார முடிவுகளில் வகுப்புகளில் பங்குபெற்று கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் முதுகலை படித்து முடிக்க வேண்டும். அப்படி படித்து முடித்தால் மட்டுமே அவர்களால் இருபதாயிரத்தை பார்க்க முடியும்.
பாட அமைப்பு அவர்களை குறைந்த பட்சம் மூன்று வருடமாவது படிக்க வைக்கும்படி அமைந்திருக்கும். மூன்றாம் வருடத்தின் இறுதியில் சுமார் அறுபது சதவீத மக்கள் தான் தேர்ச்சி பெறுவார்கள். மீதமுள்ளவார்கள் மீண்டும் படிக்க வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக்கப்படுவார்கள்.
இது ஒருவகையான நூதனமான திருட்டு இது. 'ஒரு மனித வளத்திற்கு குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வெளிநாட்டு வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் வாங்குகிறார்கள். அதுவும் பொறியியல் படித்து கேம்பஸ் இன்டர்வியுவில் வேலைக்கு வரும் ஊழியனுக்கு குறைந்தது இருபதாயிரம் அளிக்கப்பட வேண்டும் என்பதால் அவனுக்கு பதிலாக ஒரு பி.எஸ்.சி படித்தவனை எடுத்தால் பத்தாயிரம் கொடுத்தால் போதுமானது. அதுவும் இந்த முதுகலை படித்து முடிக்கும் வரை அவன் வேறு நிறுவனங்களைத் தேட மாட்டான். அதுவரை அவனுக்கு அளிக்கும் சம்பளமும் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தைத் தான் அளிக்கப் போகிறது என்கிற எண்ணம்.
ரிசோர்ஸ் கட் டவுனின் (Resource Cut Down) பின்புலம்
இந்த அநியாயங்களின் அடுத்த உச்சம் தற்போது தேநீர்சிஸ் நிறுவனத்தில் நடந்து வரும் ரிசோர்ஸ் கட் டவுன் (Resource Cut Down). தற்போது நிறைய பேரை வேலையை விட்டு நீக்கியதற்கு, அவர்கள் சரியாக வேலைப் பார்க்காத காரணத்தால் நிறுவனம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறுகிறது. இது உண்மை தானா? சற்று உற்று நோக்குவோம்.
நீக்கப்பட்டவர்கள் யார்?
முதலில் வேலையில் ஒருவன் புதிதாக சேர்கின்றபோது அவனுடைய போஸ்ட் 'Trainee' எனப்படும். அதன் பின் படிப்படியாக அவன் நிறுவனத்திற்கு பங்களிக்கின்ற விதம், அவனது பதவியை மேல் எடுத்துச் செல்கிறது. இன்று தேநீர்சிஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்ட பலரும் இரு வகையில் விழுகின்றனர் ஒருவர் 'Trainee' மற்றொருவர் 'Associate Consultant'.
ப்ராஜெக்ட் கிடைப்பதற்காக மாதங்களாக காத்திருப்பவர்கள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொதுவாக சிலர் ஏமாற்றும் எண்ணத்துடன் கிடைக்கின்ற ப்ராஜெக்ட்களுக்கு நொட்டை கூறி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கப் பார்ப்பதுண்டு. வேறு சிலர் நிறைய முயற்சிகள் எடுத்தும் ப்ராஜெக்ட் ஏதும் இல்லாத காரணத்தால் காத்திருப்பதும் உண்டு; இந்த இரண்டு பிரிவுகளில் உள்ளவரையும் கரிசனம் பார்க்காது நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியுள்ளது.
அடுத்ததாக consultant-களுக்கு வருவோம். யார் இவர்கள்? அடிப்படையாக ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்தவர்களால்தான் இந்த பதவியை எட்ட முடியும். இன்று நிறுவனம் இந்த மனிதர்கள் பலரை எப்படி தகுதியற்றவர் எனக்கூறி நீக்கியுள்ளது? இவர்கள் உண்மையிலே தகுதியற்றவர்கள் என்றால் எதற்காக இத்தனை ஆண்டுகள் இவர்களை நிறுவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
Associate Consultant பதவியில் இருப்பவர்கள் மாதத்திற்கு குறைந்தது ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு இவர்கள் இடத்தில் வேறொரு ஆளை புகுத்தி விட்டால் அவர்களுக்கு இருபதிலிருந்து, முப்பதாயிரம் வரை சம்பளம் கொடுத்தால் போதும். அதுவும் புதிதாக இணைந்துள்ளவர்களைப் பயன்படுத்தினால் இருபதாயிரம் கொடுத்தால் போதுமானது. இதுதான் ஐ.டி. நிறுவனங்களின் காஸ்ட் கட்டிங் (Cost Cutting) முறை.
'ஷாக்' விளைவுகள்
நண்பன் கூறுகையில், இப்போதெல்லாம் என் டீம் லீட் தினமும் வந்தவுடன் மெயில் எதாவது வந்ததா என்று கேட்கிறார். எல்லோர் மீதும் அவருக்கு நம்பிக்கை போய் விட்டது. வெளிநாட்டிலும் இதுதான் நடக்கிறது. இங்கே டிஸ்மிஸல் லெட்டரை கொடுத்து ஒரு மாத ஊதியம் கொடுத்து ஒரே நாளில் கிளம்பச் சொல்கிறார்கள், வெளிநாட்டில் ஒரு மாத கெடுவாம்.
அங்க ஃபாரின்ல இருப்பவர் தினமும் போன் பண்ணி ஏதாவது சொன்னாங்களா? என்று தான் முதலில் கேட்கிறார். பக்கத்து டீம்'ல காத்தால வந்தவர் சாப்பிட போய் இருக்காரு. வந்தவருக்கு ஹெச்.ஆர்.கிட்டேந்து ஒரு மெயில் 'உங்கள வேலையை விட்டு தூக்கறோம்ன்னு' அப்படியே ஷாக்காகி உட்கார்ந்தவர் சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பிட்டார்.
அநியாயம் பண்றாங்க இங்க நிறைய பேர் ஹவுசிங் லோன், அது இதுன்னு இறக்கி விட்டுறுக்காங்க. பேமிலி மேன் - எங்கள வேலையை விட்டு தூக்கிட்டா நாங்க குடும்பத்த எப்படி காப்பாற்றுவதுன்னு ஒவ்வொரு நாளும் கவலைபடறாங்க. இந்த இடம் இப்போ வேலைப் பார்க்குற இடம் மாதிரியே இல்லை. நாளைக்கு இவங்களோட ஹெல்ப் இல்லாம நாங்கல்லாம் எப்படி வேலைப் பார்க்க முடியும்?
எத்தனையோ வருடம் தேநீர்சிஸ் நிறுவனம் ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய பெரிய லாபங்களை ஈட்டிருக்கு. அப்பலாம் அதுக்கு காரணமா இருந்த ஊழியர்களுக்கெல்லாம் ஊதியத்தை ஏற்றியா கொடுத்திருக்கு? நிறுவனத்திற்காக உழைத்தவர்களை Poor Performers என்று பொய்யாக பட்டம் கட்டி வேலையை விட்டு அனுப்புவது அநீதியானது.
தன்னுடன் இருப்பவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும், தன் வேலை போகாமல் இருந்தால் சரி என்ற நோக்கத்துடன் பிற ஊழியர்கள் இன்னும் சுயநலமாக அமைதிகாப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.
வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்தே பழகிய முதுகெலும்புகள் இன்று ரப்பர் துண்டாக மாறி வருகின்றன. முதலாளித்துவத்தின் உச்சபட்ச பசிக்கு இன்று உணவுகள் கூடிக் கொண்டே போகின்றன. தீராப் பசிக்கு உணவாக - என்றுதான் உறைக்குமோ?
கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்று, சமூக சேவைக்கு லட்சக் கணக்கில் பணம் ஒதுக்குகிறார்கள். உங்களிடம் வேலை பார்ப்பவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் தானே? அவனுடைய நல்வாழ்வுக்கு யார் சார் ரெஸ்பான்சிபிள்?

No comments:

Post a Comment