Friday, December 21, 2012

குட்டி கதைகள்

கதை1
*******
சமையலறையில் இருந்த புவனேஸ்வரி ஈரக்கரங்களைப் புடவைத் தலைப்பில் துடைத்தபடி வெளியே வந்தாள்.

"யாரது?"

கதவைத் திறந்தாள். எதிரே நின்றவளைப் பார்த்ததும் திகைப்பும் மலர்ச்சியும் வந்தன.

"நீயா!" என்றாள் ஆச்சர்யமாய்.

... இருக்காதா பின்னே? போனவாரம் பெண் பார்த்து... அதே இடத்திலேயே மருமகளாக ஏற்க சம்மதம் என்று சொல்லிவிட்டு வந்தவளுக்கு... அதே பெண் இன்று வீடு தேடி வந்தால்...?

"வா...வனிதா...என்ன இது...திடீர் விஸிட்..."

ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தவளிடம் புன்முறுவலுடன் கேட்டாள்.

"...என்ன சாப்பிடறே...?"

வனிதா பேசவில்லை. சங்கடத்துடன் சிரித்தாள்.

"முதமுதல்வே நம்ம வீட்டுக்கு வந்திருக்கே. ஏதாவது சாப்பிட்டே தீரணும். உன்னை நான் சும்மா விடமாட்டேன்" வனிதா ஏதோ சொல்ல முயன்றதைக் கவனிக்காமல் வேகமாக உள்ளே போனாள். மாலை டிபனுக்காகச் செய்திருந்த பஜ்ஜியை ஒரு தட்டிலும் ஒரு டம்ளரில் தண்ணீரும் கொண்டு வந்து எதிர் டீபாய் மேல் வைத்தாள்.

தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

"சாப்பிடும்மா..."

புவனேஸ்வரியை நிமிர்ந்து பார்த்தாள்.

"வந்து... உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு..."

"எதைப் பத்தி?"

"எப்படி சொல்றதுன்னு புரியலே..." என்று இழுத்தவள், மெல்ல தன் கைப் பையைத் திறந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாள்.

"நேத்து தபால்ல இந்தக் கவர் எனக்கு வந்தது... பிரிச்சுப் பாருங்க உங்களுக்கே புரியும்..."

புவனேஸ்வரி பதற்றத்துடன் வாங்கிப் பிரித்தாள். உள்ளே ஒரு போட்டோ. அதன் பின்புறம் சிவப்பு மையில்... 'இதற்கு மேலும் அத்தாட்சி வேண்டுமா? புத்திசாலித்தனமாக முடிவெடு..உன் நலம் விரும்பி..." என்று எழுதியிருந்தது.

புகைப்படத்தினைத் திருப்பியதும் பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் மகன் சதீஷும் வேறொரு பெண்ணும்... மிக நெருக்கமாக....

வனிதா மௌனமாய் புவனேஸ்வரியைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

புவனேஸ்வரியின் முகம் மெல்ல இயல்பானது.

"...இந்த ஃபோட்டோ நேற்று தபால்ல வந்ததா..."

"ஆமா...ஆனா...அதை யார் அனுப்பினாங்கன்னு எனக்குத் தெரியலே..."

"உங்க வீட்டுல காண்பிச்சுட்டியா...?"

"இல்லே..."

"...ஏன்...?" ஆராய்கிற பார்வையுடன் கேட்டாள் புவனேஸ்வரி.

"எனக்கு முதல்லே என்ன செய்யிறதுன்னே புரியலே...நீங்க என்னைப் பெண் பார்த்து...உடனேயே சம்மதம்னு சொன்னதும்...எங்க வீட்டுல எல்லோருக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சுப் போச்சு...கணவரை இழந்த நீங்க...கைக்குழந்தையோட வாழ்க்கையில் ரொம்ப போராடி...உங்க மகனைப் பெரியவனாக்கி படிக்க வச்சு... நல்ல வேலையிலும் வச்சுருக்கீங்க... அதுவுமில்லாம... 'போய் பதில் போடறோம்'னு சொல்லிட்டு எதுவும் சொல்லாம விட்டுடற மனுஷங்களுக்கு மத்தியில... ரொம்ப வித்தியாசமான பெண்மணியா தெரிஞ்சீங்க... இந்த நிலைமையிலதான் இப்படி புதுசா ஒரு குழப்பம். உங்களிடமே சொல்லி தீர்வு காணணும்னு வந்திருக்கேன்..."

"இப்ப நான் என்ன செய்யணும்..."

வனிதா தீர்க்கமாய் அவளைப் பார்த்தாள்.

"...உங்க மகனோட இன்னொரு முகம்... இப்ப இந்த போட்டோவில் தெரிஞ்சுபோச்சு. அடுத்த வாரம் நடக்கிறதா இருக்கிற நிச்சயதார்த்தம்... நின்னு போச்சுன்னா... ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்விகள் வரும். பழியை இப்ப யார் மேலப் போடறது...? நீங்களா...வரதட்சணை...அது...இதுன்னு புதுசா பிரச்சனை பண்ணி நிறுத்திட்டிங்கன்னா... நல்லதாப் போயிரும்..."

புவனேஸ்வரியின் முகம் இறுக்கமாகியது.

"...அது மட்டும் முடியாது.....வனிதா..."

"...என்ன...ஏன்...?"

"...தப்பு என் மகன் மேல..அதை ஏன் மறைக்கணும்...? நானே நேரா உங்க வீட்டுக்கு வரேன். இந்த போட்டோவைக் காட்டி... வேற நல்ல எடத்துல... உனக்குக் கல்யாணம் பண்ணச் சொல்றேன்...வரதட்சணை கேட்கக் கூடாதுங்கிறது என்னோட கொள்கை... அதை ஏன்... பொய்யா... உங்க வீட்டு மேல திணிக்கணும்..." என்றாள் உறுதி பூர்வமாய்.

"ஆம்பளைன்னா கல்யாணத்துக்கு முன்னால கொஞ்சம் அப்படி... இப்படித்தான் இருப்பான்... நீதான் அனுசரிச்சுப் போய் அவனைத் திருத்தணும்னு... என்னை வற்புறுத்திக் கல்யாணம் செஞ்சுவச்சா...?" என்றாள் வனிதா.

"...நான் விடமாட்டேன்...! அதற்கு சம்மதிக்கவும் மாட்டேன்... நீயும் ஒரு பெண்... என்னைப் போல சக மனுஷிக்கு ஓர் அநீதி நிகழ சம்மதிக்க மாட்டேன்... முதல்லே நான் ஒரு மனுஷி... பிறகுதான் தாய்..." என்றாள் புவனேஸ்வரி.

"...நான் தோத்துட்டேன்..." என்றாள் வனிதா.. சிரிப்பும் கண்ணில் நீருமாக.

"...நீ...என்ன சொல்றே?.."

"...இந்த போட்டோ... பொய் அம்மா... எல்லா மாமியார்களும் மருமகளை அடிமைப்படுத்துகிற ரகம்தான்னு... என்னோட நினைப்பு... சதீஷைத் தற்செயலா சந்திச்சபோது என்னோட கருத்தைச் சொன்னேன். எங்கம்மா நீ நினைக்கிற மாதிரி இல்லேன்னு...சிரிச்சாரு... ரெண்டு பேருமா... ஆடின நாடகம் தான் இது... மன்னிச்சிருங்க.. நிச்சயமா... உங்களைப் போலவே... ஒரு பெருமை வாய்ந்த பெண்ணா... நானும் இருப்பேன்..."

"....முதல்லே இந்த போட்டோவை கிழிச்சுப்போடு..." என்றாள் புவனேஸ்வரி சிரிப்புடன்...!



கதை2
*******
வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. உடனே குடும்ப தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு பாருங்க. யார் இதற்க்கு காரணம்?

அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது.

மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்லாக்பெர்ரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாத...ு அப்பா.

இப்போது அனைவைருக்கும் ஒரே அதிர்ச்சி. நாம் யாரும் உபயோக படுத்தலன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க.

அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான்: உங்கள மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு...?

சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்ல, வேறொருவர் நமக்கு அத செய்யும் வரை...!



கதை3
*******

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

... அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

ஆத்தீ... கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்க...!



கதை4
*******
ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்...தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்"

"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்.

இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்...!


கதை5
*******
கயிற்றில் போட்ட முடிச்சுக்களைக் காட்டி, ”இதை அவிழ்க்க முயலுங்கள்” என்றார் புத்தர்.

”அதற்கு முன் முடிச்சு போடுவதை நான் பார்த்திருக்க வேண்டும்” என்றார் அவரது சீடர் .

பாராட்டிய புத்தர் சொன்னார், ”ஒரு சிக்கல் ஏற்படுகிறதென்றால், அதற்குள் எப்படி மாட்டிக் கொண்டோம் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

அதிலிருந்து வெளிவரும் வழி தானாகத் தெரியவரும்.”

பலரும் சிக்கல்களைத் தீர்க்கும் அவசரத்தில் அவை உருவான விதத்தை உணர்வதேயில்லை...!


கதை6
*******
நல்ல தம்பி ஒரு நாள் சர்க்கஸ் பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர கூட்டம். நம்மூரு அரசியல்வாதிகளை விட நல்லா வித்தை காட்டிக்கிட்டிருந்தாங்க.

அப்ப பாத்தீங்கனா பயங்கர பில்டப்போட ஒரு சிங்கம் வந்துச்சு. பின்னாடியே ஒரு பொண்ணும் வந்துச்சு. சிங்கம் வாயில ஒரு சாக்லேட் வச்சுக்கிட்டு நிக்க, அந்த பொண்ணு தன் வாயேலே அந்த சாக்லேட்ட எடுத்துட்டா. பயங்கர கைத்தட்டல்.

இப்ப அங்க நின்னுக்கிட்டு இருந்த ரிங் மாஸ்டர் கூட்டத்தை ப...ார்த்து 'யாருக்காவது இப்படி செய்ய தில் இருந்தா மேடைக்கு வாங்க' னு கூப்பிட்டார். நல்ல தம்பி படார்னு எந்திரிச்சு மேடை ஏறிட்டார்.

ரிங் மாஸ்டர் நல்லதம்பியை ஒரு லுக் விட்டுட்டு சிங்கம் வாயில இன்னொரு சாக்லேட்ட வச்சுட்டு இப்ப எடுங்க அப்படின்னார்.

ரிங் மாஸ்டரை முறைச்சு பார்த்த நல்ல தம்பி 'என்னைய என்னா நினைச்சீங்க...?

சிங்கம் செய்யறத நான் செய்கிறேன். அந்த பொண்ண வந்து எடுக்க சொல்லுங்க' அப்படின்னாரு.

எப்புடி...?


கதை7
*******
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்...

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார், சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்...

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்..., என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்...

அவன் வீட்டில் இருக்க, இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ், முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள். சொல்றதை கேட்க மாட்டேங்குது, படின்னா படிக்க மாட்டேங்குது, சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது, அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று பாய...

அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா, என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்..

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற... ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது...

அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால்தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...

மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்...!



கதை8
*******
ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய்வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால்நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள்.புலியைக் கண்டாள்.அது உறுமியது.பயந்து வந்து விட்டாள்.மறுநாள் சென்றாள்புலியைக் க...ண்டாள்.அது உறுமியது.ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது.அனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது.சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது.ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள்.முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார்.அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார்''இனி உனக்கு மூலிகை தேவையில்லை.

நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்?ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய்.

அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா,என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்...!

1 comment: