உயிருள்ளவரை தமிழுக்காக் குரல் கொடுப்பேன் என உத்தர்கண்ட் எம்பி தருண் விஜய் கூறியுள்ளார். நேற்று மாநிலங்களவையில் தமிழ் மொழியின் சிறப்புகளை முன் வைத்துப் பேசிய தருண் விஜய், தமிழை வட மாநிலங்களில் விருப்பப் பாடமாகக் கொண்டு வர வேண்டும் என்றார்.
மேலும் திருவள்ளுவர் தினமான ஜனவரி 16-ம் தேதியை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மீது இத்தனைப் பற்று கொண்டுள்ள தருண் விஜய், தன் தமிழ்ப் பற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறியுள்ளார்: "உலகின் தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பை இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதை எனது வாழ்வின் சிறந்த தவமாகக் கருதுகிறேன். அந்த அளவுக்கு தமிழையும், தமிழ் படைப்புகளையும் நான் காதலிக்கிறேன். நான் தமிழ் மீது கொண்டுள்ள ஈர்ப்பு, நான் வாழும் காலத்தில் அதற்கு ஏதேனும் தொண்டு செய்ய வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனது விருப்பத்துக்கு எந்தத் தடையும் யாரும் விதித்ததில்லை. அதனால், உயிருள்ளவரை தமிழுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்!
வட மாநில மக்கள் தமிழைக் கற்க வேண்டும். தமிழ் மொழியில் உள்ள சிறப்புகளை அறிய வேண்டும் என்பதே என் ஆசை. தமிழ் மக்களை இந்தி கற்கச் சொல்லும் முன், வட மாநிலத்தவர் தமிழ் கற்க ஆரம்பிக்க வேண்டும், என்பதுதான் நான் சொல்வது," என்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும்.
உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும், உத்தரவுகளும் தமிழிலேயே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
பெரும்பாலான வட இந்திய கோர்ட்டுகளில் உள்ளூர் மொழியை தொடர்பு மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கும்போது ஏன் தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கக் கூடாது.
வேற்று மொழி நீதிபதிகள் இருப்பதால் தமிழை ஆட்சிமொழியாக்க இயலாது என்ற வாதம் புரியவில்லை. ஏற்கக் கூடியதாக இல்லை. இந்தியாவில் அனைத்து மொழிகளுக்குமே சம மரியாதையும், கெளரவமும் அளிக்கப்பட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று அனைத்துத் தமிழக கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதை மதிக்க வேண்டும், ஏற்க வேண்டும். இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தருண் விஜய் கூறியுள்ளார்.
தருண் விஜய் இதற்கு முன் ஆர்எஸ்எஸின் பஞ்சஜன்யா பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். இவருக்கு தமிழ் நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ட்விட்டர் பக்கத்திலும், தமிழ் மொழிக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் தருண்.
No comments:
Post a Comment